தமிழகத்தில் 1986-ம் ஆண்டுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் அதிகம் வெற்றி பெற்ற உள்ளாட்சித் தேர்தலாக தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைந்துவிட்டது

.
 தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக - அதிமுக கூட்டணிகள் மாறி மாறி முன்னிலை பெற்றன. இறுதியில் 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், ஆளுங்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி 240 இடங்களைப் பிடித்தது. எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 271 இடங்களை பிடித்து அசத்தியது. இதேபோல ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 வார்டுகளில் அதிமுக கூட்டணி 2,199 இடங்களையும், திமுக கூட்டணி 2,356 இடங்களையும் பிடித்தன. பிற கட்சிகள், சுயேச்சைகள் 512 வார்டுகளை கைப்பற்றினர்.
ஆளுங்கட்சியாக இருந்தும் அதிமுகவால் 60 சதவீதத்துக்கும் அதிகமான வெற்றியைப் பெற முடியவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். அதிமுகவுக்கு சாதகமான ஊரகப் பகுதிகள், ஆளுங்கட்சி பலம், அதிகாரப் பலம், அதிமுக விரும்பியபடி ஊரகப் பகுதிகளில் மட்டும் தேர்தல், 9 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் அமைச்சர்களின் உள்ளூர் செல்வாக்கு மற்றும் தலையீடு எனப் பல அம்சங்கள் இருந்தபோதும் அதிமுகவால் திமுகவை விட அதிகம் வெற்றி பெற முடியாமல் போயிருக்கிறது. ஆளுங்கட்சியாகத் தேர்தலை எதிர்கொள்வதில் என்னென்ன சாதகமான அனுகூலங்கள் இருக்கின்றன என்பது திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்குமே தெரியும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை திமுக நாடியது. மாநில தேர்தல் ஆணையரை நள்ளிரவில் ஸ்டாலின் சென்று பேசியதெல்லாம் அதன் அடிப்படையில்தான். என்றபோதும் தேர்தல் முடிவு அதிமுக மகிழ்வுறும் வகையில் அமையவில்லை என்பதே நிதர்சனம்.
பஞ்சாயத்துராஜ் சட்டம் அமலான பிறகு  தமிழகத்தில் கடந்த 1996-ம் ஆண்டுதான் முதல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 1996, 2006 திமுக ஆட்சியிலும், 2001, 2011 அதிமுக ஆட்சியிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தேர்தல்களில் ஆளுங்கட்சியாக இருந்த கட்சிதான் வெற்றியை அதிகளவில் அறுவடை செய்துள்ளன. ஆனால், இந்த முறை ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சிகள் சற்று அதிகமாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாயத்துராஜ் சட்டம் அமலான பிறகு தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சிகள் அதிகம் வெற்றி பெறுவது இப்போதுதான் முதன் முறை.
மாநில தேர்தல் ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பு, 1986-ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசே நடத்தியது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது நடந்தத் தேர்தலில் திமுக பெருவாரியாக வெற்றி பெற்றது. அப்போது மொத்தமுள்ள 97 நகராட்சிகளில் 70 நகராட்சிகளை திமுக கூட்டணி வென்றது. அதிமுக கூட்டணியில் அதிமுகவும் காங்கிரசும் தலா 11 நகராட்சிகளை கைப்பற்றி மொத்தம் 22 இடங்களிலேயே வென்றன. இதேபோல அப்போது ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 380 இடங்களில் திமுக 138  தலைவர் பதவிகளை கைப்பற்றியது. அதிமுக 129 இடங்களையும்,  காங்கிரஸ் 68 இடங்களையும் கைப்பற்றின.
கடந்த காலங்களில் ஆளுங்கட்சி 60 - 80 சதவீத இடங்களை உள்ளாட்சித் தேர்தலில் கைப்பற்றியுள்ளன. இந்த முறை அது 50 சதவீதத்துக்குக் கீழே குறைந்துள்ளது. அந்த வகையில் 1986-க்குப் பிறகு பிறகு தற்போதுதான் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியைவிட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளன.