வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். 

இந்த வெளிநாட்டு பயணத்தில் அவர் முதலாக இங்கிலாந்து சென்றார். அங்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையை சென்னையில் தொடங்குவதற்கான சில ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் பழனிசாமி, அங்கு தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்பு பிரதிநிதிகளையும் சந்தித்தார். பின்னர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இறுதியாக துபாய் சென்றடைந்தார். அங்கும் அவர் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தனது 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை 3  மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்து நீர் மேலாண்மை குறித்து தெரிந்து  கொள்வதற்காக விரைவில் இஸ்ரேல் செல்லவுள்ளதாக தெரிவித்தார். நீர் மேம்பாடு, கழிவு நீரை எப்படி விவசாயத்துக்கு பயன்படுத்துவது? விவசாயம் தொடர்பான பல விஷங்களை தெரிந்து கொண்டு வந்து அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.