எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கவிழ்க்க தி.மு.க மற்றும் பா.ஜ.க இணைந்து சதி செய்து வருவதாக அ.தி.மு.க பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமி அரசை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் லட்சியமாக உள்ளது.

 

சட்டப்பேரவையில் சட்டயை கிழித்துக் கொண்ட போதும் கூட ஸ்டாலினால் எடப்பாடி அரசை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் தற்போது அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கூறி அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார் ஸ்டாலின். முன்பு தனியாக எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி செய்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.கவுடன் இணைந்து அ.தி.மு.க அரசை கவிழ்க்க ஸ்டாலின் திட்டம் தீட்டி வருகிறார். மேலும் பா.ஜ.கவுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள தி.மு.க முயற்சித்து வருகிறது. 

தி.மு.க – பா.ஜ.க இடையிலான உறவு ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்த போது 5 ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளது தி.மு.க அப்போதைய உறவை மீண்டும் புதுப்பிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னை வந்த பிரதமர் மோடி கலைஞர் வீட்டுக்கு நேரில் சென்று வந்த பிறகு பா.ஜ.க – தி.மு.க இடையிலான உறவு மேம்பட ஆரம்பித்தது. கலைஞர் மறைவுக்காக நாடாளுமன்றத்தையே ஒத்திவைக்கும் அளவிற்கு பா.ஜ.க தி.மு.கவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. இது எல்லாவற்றையும் விட செப்டம்பர் 5ந் தேதி சென்னையில் அழகிரி பேரணி நடத்த உள்ளது அனைவருக்கும் தெரியும்.

அப்படி இருந்தும் செப்டம்பர் 5ந் தேதி அன்று சி.பி.ஐ மூலம் அமைச்சர் மற்றும் டி.ஜி.பி வீடுகளில் சோதனை நடத்துகிறது மத்திய அரசு. இதன் மூலம் அழகிரியின் பேரணிக்கான முக்கியத்துவத்தை குறைத்து ஸ்டாலினுக்கு பா.ஜ.க உதவியுள்ளது. தமிழகத்தில் புதிய கூட்டணி தேடும் பா.ஜ.க எப்படியாவது தி.மு.கவுடன் சேர துடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தான் தி.மு.க மற்றும் பா.ஜ.க இணைந்து எடப்பாடி அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

ஆனால் மக்களின் ஆதரவு உள்ள வரை தங்களை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு தம்பிதுரை பேசியுள்ளார். அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகியாக உள்ள தம்பிதுரையே பா.ஜ.க – தி.மு.க இடையிலான உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.