நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. 

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார்.

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி “நாங்குநேரி தொகுதியை மறந்த காங்கிரஸுக்கு அதிமுகவின் வெற்றி மூலமாகத் தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்த பணத்தை வைத்து புதிய தொழில்கள் தொடங்குவதற்காக நாங்கள் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி,  ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள் என தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பட்டியலைப் பிரதமர் பெற்றுள்ளார். அந்தப் பட்டியலில் திமுக இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம் என்று தெரிவித்த முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, அதற்காகத்தான் ஸ்டாலின் அச்சப்பட்டுக்கொண்டு இருக்கிறார் என குற்றம்சாட்டினார்.

நாங்கள் வெளிநாடு செல்வதாகக் கூறும் ஸ்டாலின் ஏன் அடிக்கடி லண்டன் செல்கிறார் என்று கேள்வியும் எழுப்பினார்.