கடந்த சில மாதங்களுக்கு முன் சேகர் ரெட்டி வீட்டில் வருமான  சோதனை நடத்தியபோது டைரி ஒன்றை கைப்பற்றினர் வரித்துறை அதிகாரிகள். அதில் முக்கி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அரசு அதிகாரிகள் 50  பேருக்கு 350 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக விவரங்கள் இருந்ததையடுத்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

லஞ்ச பட்டியலை, தமிழக தலைமைச் செயலாளரும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய பொறுப்பையும் கவனித்து வரும் கிரிஜா வைத்தியநாதனுக்குத்தான் வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. அவர்தான் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

எனவே, நேர்மையான அதிகாரியாக இருந்தாலும், துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தார் கிரிஜா வைத்தியநாதன். 

இந்த நிலையில் வருமான வரித்துறை சேகர் ரெட்டி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதேநேரத்தில்  

தான் ஊழல் தடுப்பு ஆணைய பொறுப்பில் இருந்து விலகுவதாக கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 

உடனே இதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது தனக்கு பக்கபலமாக இருந்த உள்துறை செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டினிடம் ஊழல் தடுபபு ஆணைய பொறுப்பை ஒப்படைத்தார். 

ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டிருந்த நிரஞ்சன் மார்டி எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ம் ஆண்டிலிருந்து ஊழல் தடுப்பு ஆணைய பொறுப்புகளை தலைமை செயலாளரே கவனித்து வந்த நிலையில் தற்போது  முதல்முறையாக அந்த பொறுப்பில் இருந்து தலைமை செயலாளர் விலகியிருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.