சிமெண்டு உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 72 ஆண்டு நீண்ட வளர்ச்சிப்பாதை மற்றும் அதன் துணைத் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான என்.சீனிவாசனின் 50 ஆண்டுகளுக்கான தொடர்பினையும், அவருடைய திறமைமிக்க நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆகியவற்றையும் பற்றி எடுத்துக்கூறும் உயர் மதிப்பு புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, என்.சீனிவாசன் பற்றிய உயர் மதிப்பு புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனி பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , ஒருவர் முதலாளியாக உயர்வதற்கு முன் சிறந்த தொழிலாளியாக பணியாற்றி இருக்கவேண்டும். அப்படி பணியாற்றியவர்கள் தான் பிற்காலத்தில் ஒரு சிறந்த முதலாளியாக உயரமுடியும் என்பதற்கு என்.சீனிவாசனே முன்னுதாரணம் என பாராட்டினார்.

விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், டாக்டர் விஜயபாஸ்கர், தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், மைத்ரேயன் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எதிரும், புதிருமான அரசியல் தலைவர்கள் பங்கேற்புபொதுவாக சட்டசபை கூட்டத்தில் மட்டுமே இருக்கும். அங்குதான்  ஆளுங்கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஒன்றாக பங்கேற்பது வழக்கம்.

ஆனால், அரசு நிகழ்ச்சிகளிலோ, தனியார் நிகழ்ச்சிகளிலோ அதுபோன்ற காட்சிகளை காண முடியாது. எதிரும், புதிருமான தலைவர்கள் சந்தித்துக் கொள்வது என்பது எப்போதும் அரிதாகவே நடக்கும்.

அந்த வகையில், சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் முதலமைச்சரும்,  மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி மேடையில் அமர்ந்திருந்தார். மு.க.ஸ்டாலின் மேடைக்கு முன்பாக இருந்த முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தார். இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவில்லை.