edappadi and pannerselvam lets join together
தினகரன் ஜாமினில் வெளிவந்தால், பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்த்தது போலவே, பஞ்சமில்லாமல் ஊடங்கங்களுக்கு தீனி போட்டு வருகிறார் தினகரன்.
எடப்பாடி ஆட்சி கவிழுமா? ஆட்சியை காப்பாற்ற போராட்டம் என்றெல்லாம் எடப்பாடியை பற்றி செய்திகள் வெளியாகி வந்தாலும், கொஞ்சம் கூட அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், அமைதியாக இருக்கிறார் அவர்.
நமிபிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்கட்டுமே? அதனால் என்ன?. அதன் பிறகு வரும் தேர்தலில் தினகரனை முன்னிலைபடுத்தியா எதிர்கொள்ள முடியும்?. அது தினகரனுக்கே நன்றாக தெரியும்.

இப்போது, ஆட்சி கவிழ்ந்தால், பிறகு ஜென்மத்திற்கும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று தினகரனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், எம்.எல்.ஏ க்கள் பலரை தம் பக்கம் இழுத்து, நமக்கு நெருக்கடி கொடுத்தால், அவர் நினைத்ததை சாதிக்கலாம் என்று நினைக்கிறார்.
ஆனால், ஒரு போதும் எடப்பாடி அடிபணிய போவதில்லை. அதனால்தான், அமைச்சர் ஜெயக்குமார் மூலம், தகுந்த பதிலடியை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, தினகரன் கொடுக்கும் குடைச்சல் எடப்பாடிக்கும், பன்னீருக்கு இடையே, ஒரு நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே, சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கவேண்டும் என்று பன்னீர் சொல்வதை நாம் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அவர் சொன்னதுதான் உண்மையாகி இருக்கிறது.
அன்றே பன்னீர் சொல்வதை கேட்டிருந்தால், இன்று நமக்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருக்காது என்றும், எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் பலரும் நேரடியாகவே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் இருக்கும் வரை, சுதந்திரமாக ஆட்சி நடத்த முடியாது என்று, எடப்பாடி அணியினர் வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். அமைச்சர்கள் சிலர், பன்னீர் தரப்பினரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வேலை எடப்பாடி ஆட்சிக்கு, தினகரானால் நெருக்கடி ஏற்பட்டாலும், அவரால் ஆட்சியை கவிழ்க்க முடியுமே ஒழிய, புதிதாக ஒரு ஆட்சியை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், அதிமுக எம்.எல்.ஏ க்கள் அனைவரும் தினகரன் பக்கம் சென்றுவிட மாட்டார்கள்.
அத்துடன், முதல்வர் எடப்பாடி மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ க்களை சந்தித்து பேசி வருகிறார். அவர்களில் சிலருக்கு அமைச்சர் கனவு. சிலருக்கு பணம் தேவை. ஆனால், அனைவருக்கும் எஞ்சிய நான்காண்டுகள் எம்.எல்.ஏ பதவியை அனுபவித்து விடவேண்டும் என்ற ஆசை மட்டும் பொதுவாக இருக்கிறது.

அமைச்சர்களை பொறுத்தவரை, ஒரு சிலரை தவிர அனைவரும் எடப்பாடி அணியில்தான் இருக்கின்றனர். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சர்கள்-எம்.எல்.ஏ க்கள் இடையிலான உரசலை சரி செய்து வருகிறார்.
அதனால், இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எத்தனை எம்.எல்.ஏ க்கள் வேண்டுமானாலும் தினகரன் பக்கம் போகட்டும். அதனால் கவலை இல்லை என்கிற நிலையிலேயே எடப்பாடி தரப்பினர் உள்ளனர்.
