Edapadi Palanisamy team organize Against Sasikala and TTV

ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த கலாட்டாவில் அதிமுகவின் வெற்றி சின்னமான சின்னமான இரட்டை இலை, தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது . அதையடுத்து, சசிகலா அணி சார்பிலும், பன்னீர் அணி சார்பிலும் லாரி லாரியாக தேர்தல் ஆணையமே ரத்த கண்ணீரை வடிக்கும் அளவிற்கு பிரமாண பாத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொஞ்சநாள் பொறுமையாக வெடிக்க பார்த்துக்கொண்டிருந்த தீபாவும் நானும் ரவுடி தான்... நானும் ரவுடி தான்... என எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அணியின் சார்பிலும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமைகோரி பிரமாண பாத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சசிகலா அணியினர், கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களிடம் எல்லாம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாக பன்னீர் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, சில அதிமுக நிர்வாகிகள் இரு அணிகளின் பிரமாண பாத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த குழப்பங்கள் எல்லாம் தீர்வதற்குள், அடுத்த தேர்தலே வந்துவிடும் என்று கூறுகின்றனர் அதிமுக நிர்வாகிகளில் சிலர்.

இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை வைத்து பிரதமர் மோடிக்கு, நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைத்திருந்த தினகரனுக்கு அதில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் வேட்பாளராக, அனைத்து கட்சிக்கும் பொதுவான ஒருவரை நிறுத்திவிட்டு, தேர்தலே நடத்தாமல் இருக்கலாம் என்று மோடி விரும்புகிறார். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனால், அதிமுகவின் வாக்குகளே அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கட்சியில் தமது உரிமையை நிலைநாட்ட, பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார் தினகரன்.

ஆனால், தினகரனின் எந்த நடவடிக்கையும் கண்டு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா போன்ற ஆளுமை நிறைந்த தலைமை இல்லாதது, தொண்டர்கள் மத்தியில் நிலவும் சசிகலா எதிர்ப்பு மனநிலை ஆகியவை அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

ஆகவே, சசிகலா எதிர்ப்பு நிலையில் உள்ள அணிகளை இணைப்பதன் மூலமே, அதிமுகவை ஓரளவு பலம் பெற செய்ய முடியும் என்று கருதுகிறார் எடப்பாடி.

அந்த முடிவே சரியாக இருக்கும் என்றே அவருக்கு நெருக்கமானவர்களுக்கு கூறி வருகின்றனர். அதன் முதல் கட்டமாகவே, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமது படத்தை வைக்க எடப்பாடி உத்தரவிட்டார்.

இதை எல்லாம், தெளிவாக உணர்ந்த தினகரன், முடிந்தவரை, தம்முடைய ஆதரவு எம்.எல்.ஏ க்கள் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து பார்த்தார். அதனால், பலன் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தமது ஆதரவாளர்களிடம் அவர் ஆலோசித்து வருகிறார். அதேபோல், தினகரனை தட்டி வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், மறுபக்கம் எடப்பாடியும் மேற்கொண்டு வருகிறார்.

தற்போதுள்ள நிலவரப்படி, அதிமுகவில், எடப்பாடியின் கையே ஓங்கி உள்ளது. இனி, அவரது கை ஒடுக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால், சசிகலா எதிர்ப்பு அணியை வலுவாக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றே அதிமுகவினர் கூறுகின்றனர்.