edapadi palanisamy shocking on Rajendra Balaji refuses to comment
அதிமுகவில் மூன்று அணிகள் இருந்து கொண்டு, ஒன்றுக்கு ஒன்று எதிராக செயல்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரே அணிக்குள் நடக்கும் முட்டல் மோதல்கள் முதல்வரின் நிம்மதியை கெடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வனுக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். வைகை செல்வனை, ராஜேந்திர பாலாஜி காலை வாரி விடுவதும், அதற்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுப்பதும் வாடிக்கையான நிகழ்வுதான். எனினும் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில், அது நீறு பூத்த நெருப்பாகவே இருந்தது.
.jpg)
ஆனால், தற்போது ஜெயலலிதா இல்லாததாலும், கட்டுப்படுத்த சரியான தலைமை இல்லாததாலும், கோஷ்டி மோதல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பாலில் கலப்படம் இருப்பது உண்மை இல்லை என்றால், பதவி விலகுவதோடு, தூக்கு மாட்டி கொள்கிறேன் என்று கூறி அண்மையில் சர்ச்சையை கிளப்பியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அது தொடர்பாக பேசிய வைகை செல்வன், ஆதாரம் இல்லாமல் பேசிய ராஜேந்திர பாலாஜி, தற்போது பதவி விலகுவாரா? என்று கேட்டுள்ளார். ஆனால், அவர் சொன்னதுபோல் தூக்கு மாட்டி கொள்வாரா? என்று கேட்கவில்லை. அதனால் மீண்டும் பற்றிக்கொண்டது சர்ச்சை.
.jpg)
அதற்கு பதில் சொன்ன ராஜேந்திர பாலாஜி, கூலிக்கு மாரடிக்கும் வைகை செல்வனுக்கு, நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். அதற்கு, போஸ்டர் ஒட்டிய அமைச்சருக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?’ என கொந்தளித்தார் வைகை செல்வன். இது அதிமுகவின் மற்ற பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னே நிற்க ஆரம்பித்தது.
இருவரும் ஒரே அணியில் இருந்தாலும், எதிர் எதிர் துருவங்களாகவே செயல்பட ஆரம்பித்தனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, டென்ஷன் ஆனது எடப்பாடி வட்டாரம். உடனே, ராஜேந்திரபாலாஜியை அழைத்து கண்டித்த முதல்வர் எடப்பாடி, கூலிக்கு மாரடிபவன் என்றெல்லாம் நீங்கள் பேசியது தவறு. அவரை மட்டுமல்ல யாரையும் அப்படி பேசக்கூடாது என்று கூறி இருக்கிறார்.
இதனால் கட்சிக்கு தான் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இங்கு இருக்கும் பிரச்சினை போதாதென்று நீங்கள் வேறு பிரச்சினையை கிளப்புகிறீர்களா? இனியாவது அமைதியாக இருங்கள் என்று கண்டித்து அனுப்பி இருக்கிறார். மேலும் மூத்த அமைச்சர்கள் சிலரும், ராஜேந்திர பாலாஜியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைதியாக இருக்கும்படி ஆலோசனை கூறி இருக்கின்றனர்.

ஆனால், எதற்கும் அடங்காத அமைச்சர் பாலாஜி, எனக்கு அட்வைஸ் செய்ய இவர்கள் யார்?. நான் யார் என்று காட்டுகிறேன் பார் என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவிட்டு, “அழுகிப்போன தக்காளி குழம்புக்கு ஆகாது” என்று மீண்டும் வைகை செல்வனை வம்புக்கு இழுத்திருக்கிறார். இதனால், இவ்வளவு அட்வைஸ் செய்தும் இன்னும் ராஜேந்திர பாலாஜி அடங்கவில்லையே என்று அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
இதனிடையே, அமைச்சர் பதவியில் இருக்கும் ராஜேந்திர பாலாஜியை இப்படி வரம்பு மீறி பேசும்போது, அமைச்சராக இல்லாத நான், ஏன் சும்மா இருக்க வேண்டும். பழைய கதைகளை எடுத்து விட்டு நாறடிக்க போகிறேன் பார் என்று வைகை செல்வன் சவால் விட்டு வருகிறாராம். இந்த பிரச்சினை எங்கு போய் முடியுமோ? என்று கவலை தெரிவிக்கின்றனர் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர்.
