Edappadi Palaniswami holds a meeting with ADMK MLA and Ministers
டிடிவி.தினகரனின் திடீர் பெங்களூரு விசிட் தமிழக அரசியலில் மீண்டும் சூறாவளிப் புயலை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சிக்கு நான், கட்சிக்கு நீ என்ற அன்டர்கிரவுன்ட் டீலிங் டிடிவி தினகரனுக்கும், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக செய்தித் தொலைக்காட்சிகள் இன்று காலை முதலே பிரேக்கிங் நியூஸ் போட்டு அலறிக் கொண்டிருக்கின்றன.
இந்த பரபர விறுவிறு சூழலில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று காலை பெங்ளூரு சென்றார். தினகரன் வருகிறார் என்ற தகவல் வெளியானதும், தேசிய தொலைக்காட்சிகள் முதல் லோக்கல் சேனல் வரை இந்தியாவின் ஒட்டுமொத்த மீடியாக்களும், பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை முன்பு குவிந்தன.
இந்நேரம் வந்திருக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்புடன் மதிய உணவையும் தவிர்த்த செய்தியாளர்கள் கால்கடுக்க மைக் சகிதமாக சிறைச்சாலை முன்பு காத்திருந்தனர். ஆனாலும் தினகரனின் வருகையில் தாமதம்.. ஒருகட்டத்தில் கேமெராமேன்களுக்கும் சலிப்புத் தட்ட, காரில் வந்திறங்கினார் டிடிவி.தினகரன்.

மூச்சு முட்ட ஓடியும் செய்தியாளர்களை கிஞ்சிற்றும் கவனிக்காத தினகரன் நேராக சிறைச்சாலைக்குள் சென்றார். தினகரன் சசிகலா இடையேயான இச்சந்திப்பு ஏறக்குறைய ஒன்ரறை மணி நேரமாக நடைபெற்றது. அப்போது எடப்பாடியை அரவணைத்துச் செல்வதா, அல்லது இருக்கும் 32 எம்.எல்.ஏ.க்களை வைத்து அரசுக்குத் தண்ணி காட்டுவதா என்பது குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
தினகரனின் பெங்களூரு விசிட் முதல் சென்னைக்கு கிளம்பியது வரை லைவ் வேனைக் கொண்டு முதல் அமைச்சர் எடப்பாடிக்கு நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட்ஸ் தரப்பட்டதாம்..
.jpg)
இதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ,தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்டச் செயலாளர்கள், டிடிவி மற்றும் எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என பலர் கொண்டனர்.
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரனின் தரப்பே ஆதிக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. “இங்க பாருங்க, தற்போதைய நிலை என்னவென்று உங்களுக்கு நல்லாத் தெரியம். இத பத்தி விளக்கம் கொடுக்கனும்னு அவசியம் இல்ல… கட்சி நிர்வாகத்த தினகரனிடம் ஒப்படைச்சிருங்க. ஆட்சிய இப்போதைக்கு நீங்க பார்த்துக்கோங்க. கட்சி எங்க ஏரியா, ஆட்சி உங்க ஏரியா, இந்த கோட்டத் தாண்டி நாங்களும் வரமாட்டோம், நீங்களும் வரக் கூடாது. பேச்சு பேச்சா இருக்கனும்” என்கிற ரேஞ்சில் பேச்சுக்கள் அனல் தெறித்ததாம்..

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் இதே சாரம்சம் கொண்ட கருத்துக்களை இரு தரப்புக்கும் கூறினாராம்….
என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில்...!
