Asianet News TamilAsianet News Tamil

நவம்பர் 1-ஐ தான் தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்… எடப்பாடி பழனிசாமி அதிரடி!!

அம்மா அரசால் அறிவிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

edapadi palanisamy about tamilnadu day
Author
Tamil Nadu, First Published Nov 1, 2021, 12:49 PM IST

தமிழ்நாடு நாள் குறித்த விவாதங்கள் சமீபகாலமாக சூடுபிடித்துள்ளது. பல்வேறு தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக தமிழ்நாடு நாள் என திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள் என தெரிவித்தனர். மேலும் அதற்கான புள்ளி விவரங்களையும் அவர்கள் அறிக்கை மூலம் விளக்கினர். இந்த நிலையில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் இயற்றப்பட்ட ஜூலை 18 ஆம் தேதிதான் தமிழ்நாடு தினம் என்றும் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு ஒருசாரர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் அறிவிப்பை ஏற்க மறுத்துள்ளனர். இந்த நிலையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நாளையே தனது அதிகார மமதையில் திமுக அரசு மாற்ற முயற்சிப்பதை புறந்தள்ளி, நவம்பர் 1 ஆம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்து இன்றுடன் 65 ஆண்டுகள் கடந்துள்ளது. ஆங்கிலேயே அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பும் மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்டே இன்றைய ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் இருந்தன. பின்னர், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவை பிரிந்து சென்றன. இந்த நாளை, தங்கள் மாநிலம் உருவான நாளாக அந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. இதேபோல், தமிழ்நாடு நாளாகவும் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.

edapadi palanisamy about tamilnadu day

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!' என்று பாரதியாரால் பாடப்பட்ட நம் தமிழ்நாடு உருவாக காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் 'தமிழ்நாடு தினத்தில்' வணங்குகிறேன். தமிழ் அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட நவம்பர் 1, தமிழ்நாடு தினம் நன்னாளில் 'தமிழ் கூறும் நல்லுலகம்' உருவாக காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் அவர்தம் மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நாளையே தனது அதிகார மமதையில் திமுக அரசு மாற்ற முயற்சிப்பதை புறந்தள்ளி. தமிழ் அறிஞர்களாலும், ஆர்வலர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டு அம்மா அரசால் அறிவிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என்று  பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios