Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திமுகவுக்கு திராணியில்லை… எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக திமுக அரசு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

edapadi palanisamy about raid on admk farmer ministers home
Author
Chennai, First Published Dec 15, 2021, 5:36 PM IST

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக திமுக அரசு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக, சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது. அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற திமுக அரசு மக்களை திசை திருப்பும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்தி வருகிறது. இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் அதிமுகவை அசைத்து விட முடியாது. இந்த வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம். அதிமுக வீழ்ந்து விடும் என நினைத்தார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நல்லாசியுடன் அதிமுக வளர்ந்து வருகிறது.

edapadi palanisamy about raid on admk farmer ministers home

சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 இடங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். திமுகவைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அந்த வழக்குகளில் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது. நல்ல நிர்வாகம் இல்லாத காரணத்தால் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதம் ஆட்சிக்கு வந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வில்லை. சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டால், ஒப்பந்ததாரர்கள் பணியை நிறுத்தி விட்டனர். இதனாலேயே பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் சென்னை மாநகராட்சியில் ஒரே நேரத்தில் 160 பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்துவிட்டனர். அனுபவமில்லாத பொறியாளர்களால் தண்ணீர் எங்கு தேங்கும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது. வரும் 17-ந்தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள். திமுக அரசு எல்லா வகையிலும் தோல்வியடைந்து விட்டது.

edapadi palanisamy about raid on admk farmer ministers home

மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவே இல்லை. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். விவசாயக்கடன் ரத்து முழுமையாக செய்யப்படவில்லை. 5 சவரன் வரை வங்கிகளில் அடமானம் வைத்தவர்களுக்கு தள்ளுபடி என வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே என சொல்கிறார்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்களில் நகைக்கடன் தள்ளுபடி என்பதை கைகழுவி விட்டார்கள். விவசாயக்கடன் ரத்து என்பதை முழுமையாக செய்யாமல் இன்னமும் பரிசீலனை செய்து கொண்டே இருக்கிறார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வருகிறார்கள். நாட்டு மக்களைப் பற்றி எந்த கவலையும் திமுக அரசுக்கு இல்லை. திமுகவின் வாரிசு அரசியல் குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எத்தனையோ தகுதி வாய்ந்த தலைவர்கள் இருந்தாலும் குடும்ப அரசியல் என்பது திமுகவின் தலைவிதி. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளாட்சித் தேர்தலின்போதே கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டார். கூட்டணியில் என்ன துரோகம் செய்தார்கள் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். பாமக மற்ற தொகுதிகளில் ஜெயிக்க மக்கள்தான் வாக்களித்திருக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios