ஊடகங்களிடம் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பேசக்கூடாது என்கிற தடையை நீக்கி அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. 

ஒற்றைத் தலைமை கோஷத்தை அடுத்து கூடி முடிவெடுக்க அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டது. மறு அறிவிப்பு வரும்வரை யாரும் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது. அதையும் மீறி ஊடகங்களிடம் நிர்வாகிகள் பேசினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில் அந்த அறிவிப்பை அதிமுக வாபஸ் பெற்றுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் தங்கள் பணியை தொடரலாம் என்று ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி ஒரு அறிக்கை மூலம் அறிவித்துள்ளனர். 16 பேர் மேலும் அந்த அறிக்கையில், பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், நிர்மலா பெரியசாமி, கோவை சத்யா உட்பட 16 பேர் அதிமுகவின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்தளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமமுகவிலிருந்து நேற்று அதிமுகவில் இணைந்த சசிரேகாவும் அதிமுக செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

அமமுகவில் சசிரேகா இருந்த போது ஓ.பி.எஸ் எடப்பாடி இருவரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இப்போது அதிமுகவில் இணைந்த பிறகு டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சிப்பார் எனக் கருதப்படுகிறது. டி.டி.வி.தினகரனை சசிரேகா திட்டித் தீர்ப்பதற்காகவே இந்தத் தடையை ஓ.பி.எஸ் - எடப்பாடி இருவரும் நீக்கியிருக்கலாம் எனக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.