சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்து பேசி வருகிறார். சட்டமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு சபாநாயகருடன் தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு திடீரென நடந்து வருகிறது. நாளை மறுநாள் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் சபாநாயகரை முதல்வர் சந்தித்து இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

மேலும், வரும் ஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் சபாநாயகருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஒருவேளை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில், அது அதிமுகவுக்கு சாதகமாக அமையுமா அல்லது திமுகவுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி உருவாகிறது.

அதன்படி தற்போது அதிமுகவிற்கு 122 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவிற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சையாக தினகரன் உள்ளார். 2 தொகுதி காலியாக உள்ளது. மேலும் அதிமு 122 சட்டமன்ற உறுப்பினர்களில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் உள்ளனர். 

இந்த நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் திமுகவிற்கு ஆதரவாக  வாக்களிப்பேன் என தினகரன் தெரிவித்திருந்தார். அதன்படி பார்த்தால் தினகரன் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்தாலும் 109 உறுப்பினர்களின் ஆதரவை தான் திமுக பெற முடியும். எனவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அது தோல்வியில்தான் முடியும் அதிமுகவிற்கு இதனால் எந்த பாதிப்பும் அதிமுகவிற்கு இல்லை என விமர்சனங்களும் எழுந்துள்ளது.