அமைச்சர் ரெட்டியை ’மாஜி’ ரொட்டியாக்குமா அதிரடி  தீர்ப்பு!

திருவாரூர் தேர்தல் ரத்தான சந்தோஷம் சில மணி நேரங்கள் கூட தாக்குப் பிடிக்கலை, அதுக்குள்ளே ஒரு அமைச்சரின் எம்.எல்.ஏ. பதவியே காவு வாங்கப்படுமளவுக்கு ஒரு தீர்ப்பு வந்து சேர்ந்துள்ளதால், அலறிக் கிடக்கிறது எடப்பாடியாரின் அமைச்சரவை. 
இன்னா மேட்டர்?...

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ண ரெட்டி. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர்  மீது, 1998ம் வருடம் பேருந்து மீது கல் வீசி தாக்கியதாக வழக்கு ஒன்று நடந்து வந்தது. வெகுஜனத்துக்கு வெகுவாய் தெரியாதிருந்த இந்த வழக்கில், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமானது அதிரடியாய் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது நீதிமன்றம். 

இப்படி கொத்தாக சிறை தண்டனை பெற்றுள்ள காரணத்தால் அமைச்சர் ரெட்டியின் பதவி!...அதாவது எம்.எல்.ஏ. பதவியோடு சேர்த்து, அமைச்சர் பதவியும் காலியாக போகிறது! என்று துள்ளி குதிக்கின்றன எதிர்க்கட்சிகள். அமைச்சரவையை சேர்ந்தவரின் மீது இப்படியாக வாசிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் காரணமாக, அரசின் ஸ்திரத்தன்மை லேசாக ஆட்டம் கண்டிருக்கிறது. ஏற்கனவே ‘மைனாரிட்டி அரசு’ என்று பட்டத்தை சுமந்து கொண்டிருக்கும் எடப்பாடியார் அரசிடமிருந்து ஒரு சக்கரம் கழன்று ஓடுவதன் மூலம், அடுத்தடுத்த அரசியல் மூவ்களின் மூலம் ஆட்சியே கவிழுமளவுக்கு போகுமோ? அல்லது சாமர்த்தியமாக தக்க வைக்கப்படுமா! எனும் விவாதங்கள் சுழல ஆரம்பித்துள்ளன.

’அமைச்சர் ரெட்டி, இனி மாஜி ரொட்டி’ என்று தினகரன் டீம் ஓவராய் கூத்தாடுகிறது. இத்தனைக்கும், பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசி சென்ற  துவக்க சமயத்தில் உணவு, உடை உள்ளிட்டவை இந்த பாலகிருஷ்ண ரெட்டியின் பொறுப்பில் மின்னல் வேகத்தில் சென்று வந்தன!  டி.ஐ.ஜி. ரூபா எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பின் எழுந்த விமர்சனம் ஒன்றில் ‘சில சமயங்களில் சிறையிலிருந்து வெளியே சென்று வந்த சசிகலாவும், இளவரசியும், ஓசூர் பகுதியில் பாலகிருஷ்ண ரெட்டி ஏற்பாடு செய்திருந்த பிரத்யேக ஓய்வு விடுதியில் இளைப்பாறினார்.’ என்றெல்லாம் அவருக்கு எதிராக கிளம்பின என்பதையும் இந்த சமயத்தில் நினைவூட்ட வேண்டியது அவசியம்.