கொரோனா தொற்று காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்கலாம் என்ற முந்தைய முடிவிலிருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்தலை நடத்தி முடிப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் ஆன்லைன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், தேர்தல் என்றால் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தால்தான் முடியும். கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு, 65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்தது.

 
ஆனால், இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இது தேர்தலில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர் தேர்தலில் நிற்கலாம்; பிரசாரம் செய்யலாம்; ஆனால், அந்த வயதில் உள்ளவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க மட்டும் கூடாதா? என்று அக்கட்சி கேள்வி எழுப்பியது. இதேபோல தமிழகத்தில் மதிமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பிற இடைத்தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், அதே சமயத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்போர், முன்னெச்சரிக்கையாக கொரொனாவால் தனிப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்போர் தபால் வாக்கு செலுத்தலாம் என்றும்  தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.