அதிரடியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதமே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.  

 
   
திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர். இருப்பினும் இப்போதைக்கு தேர்தல் வேண்டாம் என்ற கருத்தாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு இருந்தது. இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் தேர்தலை ரத்து செய்தது ஏன் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் 10க்கும் மேற்பட்ட காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடந்த மாதம் டிசம்பர் 17 ம் தேதி தேதி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ஏப்ரல் முடியும் வரை தேர்தலை நடத்த கூடாது என்று கோரிக்கை வைத்து இருந்தார். ஏப்ரல் வரை தேர்தலை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தலை நடத்தவில்லை. 19 தொகுதிக்கும் ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு கோரியது. திருப்பரங்குன்றத்தில் தேர்தலை நடத்துவதில் பிரச்சனை இல்லை என்று கூறினார்கள். கஜா புயலை காரணம் காட்டி  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதுகுறித்து தமிழக அரசிடம் ஆலோசனை நடத்தினோம். மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் பதிலில் திருவாரூர் உட்பட 5 மாவட்டங்கள் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசிடம் கருத்து கேட்ட பின்பே தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. பொங்கல் விழா மக்கள் கொண்டாடும் பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து வர இருப்பதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கஜா புயலில் இருந்து மக்கள் முழுதாக வெளிவர வேண்டும். இந்த தேர்தல் காரணமாக நிவாரண பணிகள் பாதிக்க கூடாது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.