தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டில் கணக்கில் வராத 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் வாக்குப்பதிவுக்கு ஒரு நாளுக்கு முன்பாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மற்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வேலூரில் நிறுத்தப்பட்ட தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி இருந்துவந்தது.

 
இந்நிலையில் வேலூரில் தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக பணப்பட்டுவாடா ஏதும் நடக்காமல் இருப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூரில் அதிக அளவில் தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே வேலூரில் தேர்தல் தொடர்பாக ஒரு மாதத்துக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வேலூர் தொகுதிகளோடு சேர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.