அப்பளம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் அது நமது உடலில் உண்டாக்கும் கொரோனா வைரஸை அழிக்கும் தன்மை உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து அறிவியலுக்கு முரணான மற்றும் போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில் இவரது கூற்று சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஏற்கனவே பதஞ்சலி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஒரு மருந்தை வெளியிட்டது. அந்த மருந்து கொரோனாவுக்கான மருந்து இல்லை என்பதை பாபா ராம்தேவ் வை அறிவிக்க வைத்தது. இந்த நிலையிலி இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சராக உள்ள அர்ஜுன் ராம் மேக்வால், "தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 'பாபிஜி பப்பட்' என்னும் அப்பளம் ஒன்றை ஒரு தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். இது கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன்," என்று இந்தியில் கூறும் காணொளி ஒன்று வட இந்திய சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.