Asianet News TamilAsianet News Tamil

இதை கைவிடாவிட்டால் நானே போராட்டத்தில் குதிப்பேன்... எடப்பாடி அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை..!

கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், கொரோனா ஊரடங்கு முழுமையாக நீக்கப் பட்ட பிறகு அப்பகுதி மக்களை திரட்டி நானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்று  எச்சரித்துள்ளார்.

Dye waste plant...ramadoss warns the tamilnadu government
Author
Tamil Nadu, First Published May 31, 2020, 4:36 PM IST

கடலூர் மாவட்டத்தின் வளமான பகுதிகளை பாலைவனமாக்கக் கூடிய இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்;- காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தின் வளமான பகுதிகளை பாலைவனமாக்கக் கூடிய இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

Dye waste plant...ramadoss warns the tamilnadu government

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் 304 ஏக்கர் பரப்பளளவில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் கடந்த 2004-ம் ஆண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் உண்மையான நோக்கம் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொண்டு வந்து, தண்ணீரைக் கலந்து கடலில் விடுவது தான்.

இத்திட்டத்தின் உண்மையான பின்னணியை தெரிந்து கொண்டதால் தான் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; அவர்களுக்கு ஆதரவாக பாமகவும் போராடி வருகிறது. மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை, ஆலையை நிறுவும் அமைப்பான சைமா எனப்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இப்போது கரோனா பரவல் அச்சம் காரணமாக நிலவி வரும் சூழலை பயன்படுத்திக் கொண்டு தொடங்கியுள்ளது.

Dye waste plant...ramadoss warns the tamilnadu government

மத்திய, மாநில அரசுகள் அண்மையில் ஒதுக்கிய முறையே ரூ.40 கோடி மற்றும் ரூ.14 கோடி நிதியைக் கொண்டு கடலூர் அருகிலுள்ள செம்மங்குப்பத்தில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணற்றில் இருந்து தினமும் பல கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து வருவதற்காக ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.இதுதவிர பெரியப்பட்டு பகுதியில் 1200 அடி ஆழத்திற்கு ஒரு மீட்டர் விட்டம் கொண்ட 11 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அவற்றின் மூலம் பூமியிலிருந்து தினமும் ஒன்றரை கோடி லிட்டர் நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதற்கும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

பெரியபட்டு பகுதியில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் பெயரளவில் 10 ஜவுளி தொழிற்சாலைகளை அமைத்து விட்டு, அந்த பூங்காவுக்காக அமைக்கப்படும் ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவுகளை தூய்மைப் படுத்தும் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறை கழிவுகளை சாலைவழியாக கொண்டுவந்து சுத்திகரிப்பது தான் திட்டமாகும். கோவை பகுதியில் பல கோடி லிட்டர் சாயக்கழிவுகள் வெளியாகும் நிலையில், அவை முழுவதையும் இங்கு சுத்திகரிக்க முடியாது. அதனால், முடிந்தவரை சுத்திகரித்து, மீதமுள்ள கழிவுகளை தண்ணீருடன் கலந்து கடலில் செலுத்துவது தான் திட்டமாகும். இதற்கு வசதியாக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நிலப்பரப்பில் 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கும், கடலுக்குள் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கும் குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.

கோவை மண்டல சாயப்பட்டறை முதலாளிகள் வளமாக வாழ்வதற்காக கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வயிற்றில் அடிப்பதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது. இந்த ஆலை இரு வழிகளில் கடலூர் மாவட்ட மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். முதலில் பூமியிலிருந்து தினமும் குறைந்தபட்சம் ஒன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாலும், அதனால் ஏற்படும் இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு கடல் நீர் ஊருக்குள் நுழைவதாலும் பெரியப்பட்டு, பெரியாண்டிக்குழி, வாண்டியாம்பாளையம், தச்சம்பாளையம், கோபாலபுரம், காயல்பட்டு, ஆண்டார் முள்ளிப்பள்ளம், வில்லியநல்லூர், புத்திரவெளி, தாழஞ்சாவடி, சான்றோர்மேடு, சிலம்பிமங்கலம், சின்னாண்டிக்குழி, புதுச்சத்திரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும்.

Dye waste plant...ramadoss warns the tamilnadu government

அதேபோல், கடலில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் விடப்படுவதால் மீன் வளம் அழிந்து, அதை நம்பியுள்ள சாமியார்பேட்டை, குமராப்பேட்டை, மடவாப்பள்ளம், அன்னப்பன்பேட்டை, ரெட்டியார்பேட்டை, ஐயம்பேட்டை, பேட்டோடை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரம் இழப்பர்.இவை தவிர நிலம் உவர்ப்பாக மாறுதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சுருக்கமாக கூற வேண்டுமானால், காவிரி டெல்டாவின் கடைசி எல்லையாக முப்போகம் விளையும் பூமியாக திகழும் பெரியப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக்கூடும். இதனால் பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளும், வனப்பகுதிகளும் அழியும் ஆபத்து உள்ளது.

கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களை இணைத்து அமைக்கப்படவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தின் ஓர் அங்கமாக இத்திட்டம் சேர்க்கப்பட்டிருந்தது. பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் கைவிடப்பட்ட போதே அத்துடன் சேர்த்து இந்தத் திட்டமும் கைவிடப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ராசயன ஆலைகளால் அப்பகுதி நச்சு பூமியாக மாறி வரும் நிலையில், அவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதை செய்வதற்கு பதிலாக இன்னொரு வேதி ஆலையை அனுமதிப்பதுடன், அதற்கு மத்திய, மாநில அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு நிதியுதவி வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல.

Dye waste plant...ramadoss warns the tamilnadu government

எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மக்களின் எதிர்ப்புகளை மீறி நடத்தப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கும் ஆணையிட வேண்டும். கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், கொரோனா ஊரடங்கு முழுமையாக நீக்கப் பட்ட பிறகு அப்பகுதி மக்களை திரட்டி நானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்று  எச்சரித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios