During the meeting with Stalin the politician did not speak - H. Raja

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின்போது இம்மியளவும் அரசியல் பேசவில்லை என்றும் நட்பு ரீதியான சந்திப்பு என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.

ஹெச். ராஜா, திமுகவுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாது நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் ராஜாவை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஹெச். ராஜா, சாரண - சாரணியர் இயக்கத் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழக அரசு முயற்சிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஹெச் ராஜா, சாரண - சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ள திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஹெச் ராஜா இன்று சந்தித்தார். ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தன்னுடைய மணிவிழாவுக்கான அழைப்பிதழை மு.க.ஸ்டாலினிடம் கொடுக்க வந்ததாக கூறினார்.

இந்த சந்திப்பின்போது, ஸ்டாலினுடன் இம்மியளவும் அரசியல் பேசவில்லை என்றும், கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான் என்றும் அரசியல் கலப்பு இல்லாத நட்பு ரீதியான சந்திப்பு என்றும் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டானிடம் விசாரித்தேன் என்றும், ஓய்வெடுத்துவரும் கருணாநிதியை தொந்தரவு செய்ய விருப்பமில்லை என்றும் ஹெச். ராஜா கூறினார்.