தமிழக சட்டசபையின் நீண்டகால மெம்பர்களில் ஒருவர் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன். இயல்பிலேயே நகைச்சுவையுணர்வு அதிகம் உடைய துரைமுருகன் பேச துவங்கினால் அத்தனை கட்சி உறுப்பினர்களும் ஆர்வம் பொங்க கேட்பார்கள். காரணம்? வாய்விட்டு சிரிக்கும் வாய்ப்பு 100% உறுதி என்பதால்தான்.

சபையில் ஜெயலலிதாவையே சிரிக்க வைத்த பெருமைக்கு சொந்தக்காரரான துரைமுருகன் பன்னீரையும், பழனிச்சாமியையும் விட்டு வைப்பாரா என்ன? சமீபத்திய நாட்களில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கு தன் பேச்சின் ஊடே ஸ்வீட் ஷாக்குகளை அள்ளிவிட்டு அசரடித்திருக்கிறார் துரைமுருகன்.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஜாலியாக வம்புக்கிழுத்தவர் “கடந்த 2011 முதல் பன்னீர்செல்வம்தான் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். ஆனால் இடையில் தர்மத்தை தேடிச் சென்றதால் ஓராண்டு தடைபட்டுவிட்டது பாவம்.” என்றார்.

கடந்த வருடம் ’தர்மயுத்தம்’ நடத்தியதால் பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இல்லை. இதனால் அவர் போன பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை என்பதைத்தான் இப்படி நக்கலாக குத்திக் காட்டினார் துரை. இதை பன்னீர் ஹாஸ்யமாகத்தான் எடுத்துக் கொண்டார்.

அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது பற்றி பேசிய துரைமுருகன் ‘மதுரையில் இந்த மருத்துவமனை அமையவில்லையென்றால் அந்த அமைச்சரின் பதவி என்னாகும் என்பதை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.’ என்றிருக்கிறார். இதற்கு முதல்வர் எடப்பாடி “அமைச்சரவையில் நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எங்களுக்கு பிரச்னையை கிளப்ப முயலவேண்டாம்.” என்று கத்தியை போட துரைமுருகன் கப்சிப்.

நாரதரின் கலகங்கள் வேண்டுமானால் நன்மையில் முடியலாம். ஆனால் துரைமுருகனின் சட்டசபை கலகங்கள் சில நேரங்களில் பெரும் பஞ்சாயத்தில்தான் முடியும். ஜெ., இருந்த காலத்திலும், சசிகலா பொதுச்செயலாளர் ஆன நேரத்திலும் சட்டசபையில் பன்னீர்செல்வத்துக்கு ஆறுதலாக பேசுவது போல் பேசி அவரை பெரும் சிக்கலில் தள்ளிவிட்டவர்தான் துரைமுருகன்.