தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு, ஒரு அரசு தேவையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ‘’தண்ணீர் தருவதாக கேரள அரசு கூறியதை, தமிழக அரசு வரவேற்றிருக்க வேண்டும். கேரள அரசு தருவதற்காக முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழக அரசு பெற்றுக் கொள்ளாதது ஏன்? தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட வரலாறும் உண்டு. 

மழையில்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. ஆதலால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு, ஒரு அரசு தேவையில்லை. ஊடகங்களும், மக்களுமே இதை தான் சொல்கிறார்கள். இதையே திரும்ப சொல்வதற்காகவா தமிழக அரசு உள்ளது? என்று அவர் கேள்வி எழுப்பினார். அப்பல்லோவில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த துரைமுருகன் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.