பாஜக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வி.பி.துரைசாமி, பேச மைக் கிடைத்தும் பேச முடியாமல் தொடர் குறுக்கீடு வந்ததால் விரக்தி அடைந்து பேச மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுகவில் இருந்து விலகிய துரைசாமி

விபி.துரைசாமி 1989 முதல் 1991 வரை மற்றும் 2006 முதல் 2011 வரை திமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர். இவர் பல சட்டமன்றக் குழுக்களுக்கான உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1995 -2001 ஆண்டுகளில் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார். இவர் 2012 திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றவர். அதிமுகவில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய விபி.துரைசாமி அங்கிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உதறிவிட்டு திமுகவில் இணைந்தார். திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்த விபி.துரைசாமி அந்த பதவியில் இருந்து கட்சி மேலிடம் நீக்கியதால் திமுகவிலிருந்து விலகி, 2020 மே 22 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 

மைக் கிடைத்தும் பேச முடியாத பரிதாபம்

அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட விபி.துரைசாமிக்கு பாஜகவில் அந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று பரவலாக கருத்துக்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்த மேடையில் விபி.துரைசாமி தன்னுடைய பேச்சை ஆரம்பித்த போது திடீரென கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் மேடைக்கு வருவதாக மைக்கில் சொல்ல விபி.துரைசாமி செய்வதறியாது திகைத்து நின்றார். அவருடைய முகம் பரிதாபமாக காட்சியளித்தது. மறுபடியும் அவர் பேச முயற்சித்த போது அருகே இருந்த பாஜக நிர்வாகிகள் அவரை பேச விடாமல் தடுத்தனர். இதனால் ரொம்பவே சூடான விபி.துரைசாமி தான் மேடையில் நின்றிருக்கிறோம் என்பதையும், கையில் மைக் உள்ளதையும் மறந்து ," அண்ணாமலை வரட்டும்.. வந்தா என்ன.. ஏன் மிரட்டுறிங்க.. என்று பேச ஆரம்பித்தார். இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேதனையில் வி.பி.துரைசாமி

 ஒருவழியாக மேடைக்கு வந்த அண்ணாமலையிடம் ''நான் இப்போ பேசலாமா தலைவரே.. நீங்க அனுமதி கொடுத்தா பேசுறேன்.. என்று கூறி விட்டு பேச ஆரம்பித்தார். அரசியலில் உச்சத்தில் இருந்த விபி.துரைசாமிக்கு இந்த நிலையா என்று மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வருத்தப்படுகின்றனர். "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே "என்ற என்ற பாடல் வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ நம்ம விபி.துரைசாமிக்கு நன்றாகவே பொருந்தும் என்று சமூக வலைதளவாசிகள் மீம்கள் தங்கள் மூலம் கருத்துகளை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.