முரண் பட்டு நிற்பதும், பிறகு சமரசம் கொண்டு தோள் கொடுப்பதும் வைகோவுக்கு வழக்கம் தான். அதேவேளையில் அவர் தன் வாழ்நாளில் எத்தனையோ அவமானங்களையும், அலட்சியங்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் துரைமுருகன் அவருக்கு வைத்த செக் என்பது வைகோவுக்கு மிகப்பெரிய மனக்காயத்தை உருவாக்கிவிட்டது. 

சமீபத்தில் ஒரு சேனல் பேட்டி ஒன்றில், ‘வைகோவும், திருமாவும் எங்களுக்கு நண்பர்கள்தான். ஆனால் அவர்கள் இன்னும் எங்கள் கூட்டணிக்குள் வரவில்லை.’ என்று ஒரு நெருப்பை பற்ற வைத்தார் துரைமுருகன். இது இந்த இரண்டு கட்சி கூடாரங்களிலும் பெரும் மனசஞ்சலத்தை விளைவித்தது. காரணம்?... அரசியலில் எந்த அதிகாரமுமின்றி பெரும் சரிவை சந்தித்திருக்கும் இந்த கட்சிகள் வரும் தேர்தலில் தி.மு.க.வை மட்டுமே தங்களின் ரட்சகனாக நம்பிக் கொண்டுள்ளனர். அந்த கூட்டணி வாய்க்காவிட்டால், அதை தேர்தலுக்கு முன்னாடியே தோல்வியை சந்தித்துவிட்ட நிலையாகதான் பார்க்கிறார்கள். அதனால்தான் துரையின் பேச்சு அவர்களுக்கு பெரும் வருத்தத்தையும், பீதியையும் கிளப்பியது. 

ஆனால் அதேநேரத்தில் துரைமுருகனின் வாதத்தை தி.மு.க.வினர் கொண்டாடினர். காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோவும், திருமாவும் இணைந்து மக்கள் நல கூட்டணி எனும் பெயரில் லூட்டி அடிக்காமல் இருந்திருந்தால் விஜயகாந்தை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, ஆட்சியையே பிடித்திருப்போம் நாங்கள்! என்பது தி.மு.க.வின் ஆதங்கம். அதைக் கெடுத்துவிட்ட திருமா, வைகோ இருவரையும் மன்னிக்கவே கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. 

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கையில், வைகோ அவரை வந்து பார்த்தபோது கூட இதே கோபத்தை காட்டினர்  தி.மு.க. தொண்டர்கள் சிலர். ஆக தி.மு.க.வுக்குள் அந்த ஆத்திரம் இருப்பது உறுதி. இந்நிலையில்தான் துரைமுருகன் பேசியதை அவர்கள் கொண்டாடினர். ஆக துரை வழியே தி.மு.க. இப்படியொரு நிலைப்பாட்டை அறிவித்ததும், முதல் நாள் திருமாவளவனும் மறுநாள் வைகோவும் ஓடோடிப்போய் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்ததனர். 

திருமாவாவது ஸ்டாலினை விட இளையவர். அவர்  கீழிறங்கி சென்றதை கூட மூத்தவருக்கான மரியாதை! என்று எண்ணிக் கொள்ளலாம். ஆனால் மூத்தவரான வைகோ, ஸ்டாலினிடம் இறங்கிச் சென்றதை ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளால் ஜீரணிக்க முடியவில்லை. தலைவரே என்ன இருந்தாலும் நீங்க அப்படி போய் நின்றிருக்க வேண்டாம். தி.மு.க.வுல இன்னைக்கு துரைமுருகன் இருக்குற இடத்துல இருந்திருக்க வேண்டிய ஆள் நீங்க. ஏன் ஸ்டாலினின் பதவியையே கூட வகிக்க தகுதியான ஆளுமை நீங்கதான். 

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம்!ன்னு மேடைக்கு மேடை முழங்குறாங்களே. அப்படின்னா கருணாநிதிக்கு பிறகு அவர் மகன் ஸ்டாலின் தான் தலைவராக வரணுமா என்ன்? உங்களுடைய இருப்பை கருணாநிதி தொந்தரவு செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் நீங்க அங்கே தலைவராக கூட இருந்திருக்க முடியும்.’ என்று புலம்பியிருக்கின்றனர். அவர்களை சட்டென்று இடைமறித்த வைகோ ”எல்லாமே எனக்கு தெரியும், புரியும். அங்கிருக்கும் முக்கியஸ்தர்கள் ஒவ்வொருத்தருடையை குணாதிசயங்களை முழுமையாக புரிந்து வைத்திருப்பவன் தான் இந்த வைகோ. 

நம்மை சீண்டிவிட்டால் என்ன செய்கிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம்? என்பதை சோதிப்பதற்காக துரைமுருகன் திட்டமிட்டு அப்படியொரு நரித்தனத்தை காட்டியிருக்கிறார். அவர் அப்படி சொன்னபிறகு நான் தான் ஓடிச்சென்று ஸ்டாலினை பார்த்திருக்கிறேன். இப்படி கூட்டணிக்க்காக இறங்கிப் போன பின்பாக இனி அவர்கள் ஒதுக்குவதுதான் சீட், கொடுப்பதுதான் தொகுதி! ஒத்து வரவில்லையென்றால் நாமே வெளியேறிக் கொள்ள வேண்டியதுதான்!  இதுதானே அவர்களின் திட்டம். 

ஆக துரைமுருகனின் குணமும் தெரியும், இதையெல்லாம் தட்டிக் கேட்காமல், தடை சொல்லாமல் இருக்கின்ற ஸ்டாலினின் அலட்சிய குணமும் புரியும். ஆனால் என்ன செய்வது? தேர்தல் அரசியல் செய்யும் நமக்கு வெற்றி என்கிற விஷயம் நடந்து பல காலமாகிவிட்டது. சில அதிகாரங்களை தக்க வைத்தால்தான் மக்களுக்கான பிரச்னைகளில் வலுவாக குரல் கொடுக்க முடியும். வெறும் அமைப்பாக மட்டுமே இருந்து கொண்டிருந்தால் மக்கள் பிரச்னையில் சாதிக்க முடியாது. பதவியும் இருந்தால்தான் நல்லதை செய்ய முடியும். என்னை நம்பி இத்தனை காலம் வந்து கொண்டிருக்கும் உங்களின் வாழ்க்கையையும் நான் பார்க்க வேண்டுமே!” என்று கலங்கிவிட்டு கண்களை துடைத்திருக்கிறார். பெருங்கோபமும், பேரன்பும்தானே ம.தி.மு.க.!