ம.தி.மு.க. உதயமாவதற்கு காரணமான விஷயங்களில் கரூர் மண்ணில் வைகோவுக்கு ஆதரவாக எழுந்த அனல் அலைகளும் ஒன்று. அதனால்தான் எப்போதுமே அந்த மாவட்டத்தின் மீது பெரிய பாசத்துடன் இருப்பார் வைகோ. 

இந்நிலையில், அதே கரூர் மாவட்ட ம.தி.மு.க.விலிருந்து இரண்டு நகர செயலாளர்களும், எட்டு ஒன்றிய செயலாளர்களும் விலகிவிட்டனர். ‘ஏன் இந்த பல்க் ஷாக்?’ என்று அவர்களிடம் கேட்டால், வார்த்தைக்கு வார்த்தை வைகோவின் அரசியல் நிலைப்பாடுகளை வசைபாடுகின்றனர். குறிப்பாக அக்கழகத்தின் மாநில செயலாளராகவும், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளராகவும் இருந்த கலையரசனோ...”வெற்றிகரமாக தேர்தல் அரசியல் செய்ய முடியாவிட்டாலும் கூட கொள்கை பிடிப்பில் அருமையான கட்சி ம.தி.மு.க! எனும் பெயரை வாங்கி வைத்திருந்த கட்சியை கடந்த சில காலமாக சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறார் வைகோ. 

என்னதான் கொள்கை, யாரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும்? என்று எதுவுமே நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ புரியவில்லை. அவர் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளை பொதுவெளியில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். இதை அவரது காதுகளுக்கு கொண்டு சென்றால், எங்களையே ஏளனமாக பேசுகிறார். கோயமுத்தூரில் நடந்த பொதுக்குழுவில், ‘தி.மு.க.வை அழிப்பததான் நமது முதல் வேலை’ என்றார். 

ஆனால் ஒரே வருடத்தில் அப்படியே தலைகீழ் பல்டி அடித்துவிட்டார். இப்போது தி.மு.க. கூட்டணிக்காக அல்லாடுகிறார். கூட்டணியில் ம.தி.மு.க. இல்லை! என்று துரைமுருகன் அவ்வளவு அவமானப்படுத்திய பிறகும் கூட அறிவாலயம் நோக்கி ஓட வேண்டுமா? யாருக்காக தி.மு.க.விலிருந்து வெளியேற வேண்டிய நிலை வந்ததோ அவரிடமே அரசியல் பிழைப்புக்காக போய் நிற்க வேண்டுமா? தனக்கும், கணேசமூர்த்திக்கும் ஆளுக்கொரு எம்.பி. சீட் வேண்டும்! இதற்காகத்தான் ஸ்டாலின் புகழ் பாடுகிறார். 

ஈரோடு கணேசமூர்த்தியின் பேச்சைக் கேட்டு கட்சியின் தன்மானத்தை அடமானம் வைக்கப்போகிறார் என்பது தெளிவாகிறது, அதனால்தான் வெளியேறிவிட்டோம் நாங்களாகவே!” என்று பொங்கியிருக்கிறார். ஆனால் ம.தி.மு.க. தரப்போ, கலையரசன், கழக கட்டுப்பாடுகளை மீறி நடந்ததற்கான ஆதாரங்களை எடுத்து வைத்து, ‘தவறு செய்தார். கண்டித்தோம், வெளியேறிவிட்டார்! வைகோ என்றுமே தனக்கு பதவியோ, அதிகாரமோ, பணமோ வேண்டி கூட்டணி வைத்ததில்லை. கழக தொண்டர்களுக்கு இது நன்கு புரியும். பதவிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்திருந்தால் இந்நேரம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று எங்கள் இயக்கத்திலும் அதிகார மையங்கள் இருந்திருப்பார்கள். அப்பேர்ப்பட்ட வைகோவை வாய்க்கு வந்தபடி இகழ்வது கலைக்கு அழகல்ல.” என்கிறார்கள்.