உங்கள் ஆணைக்கு கட்டுப்படுகிறோம்; எங்களை வழிநடத்துங்கள் என திமுகவிற்கு தலைமையேற்க ஸ்டாலினுக்கு செயற்குழு கூட்டத்தில் அழைப்பு விடுத்தார் துரைமுருகன்.

கருணாநிதியின் மறைவை அடுத்து, திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் செயற்குழு நடந்துவருகிறது. அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் இந்த செயற்குழு நடந்துவருகிறது. 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், க.அன்பழகன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், திமுகவின் 19 அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

செயற்குழுவில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி.கே.எஸ் இளங்கோவன், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் மக்கள் நல திட்டங்களை பட்டியலிட்டார். கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசினர். டிகேஎஸ் இளங்கோவன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர். 

பின்னர் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கருணாநிதியுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய துரைமுருகன், கலைஞர் தான் எனக்கு தாயும் தந்தையும். எனக்கு இரண்டாவது முறையாக உயிர் கொடுத்தவர் கலைஞர். சுயமரியாதையை கற்றுக்கொடுத்தார். 55 ஆண்டுகாலம் அவருடன் எந்தவித மனவருத்தமும் இல்லாமல் பழகினேன் என்றார்.

கருணாநிதியுடனான நினைவுகளை பகிர்ந்த துரைமுருகன், இறுதியாக உரையை முடிக்கும்போது, ஸ்டாலினை கட்சிக்கு தலைமையேற்க அழைப்புவிடுத்தார். தளபதி மூன்று இதயங்கள் படைத்தவர். தளபதி, உன் ஆணைக்கு கட்டுப்படுகிறோம். தலைவராகி எங்களை வழிநடத்துங்கள் என என அழைப்பு விடுத்து உரையை முடித்தார் துரைமுருகன். 

ஸ்டாலின் செயற்குழு தலைவராக பொறுப்பேற்கும்போதும் இதேபோலத்தான் அழைப்பு விடுத்தார் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.