கருணாநிதிக்கு தன்னை மிகவும் பிடித்ததற்கான காரணத்தை திமுக செயற்குழு கூட்டத்தில் கூறி நெகிழ்ந்தார் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன். 

கருணாநிதியின் மறைவை அடுத்து திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், க.அன்பழகன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், திமுகவின் 19 அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

செயற்குழுவில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி.கே.எஸ் இளங்கோவன், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் மக்கள் நல திட்டங்களை பட்டியலிட்டார். கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசினர். டிகேஎஸ் இளங்கோவன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர். 

பின்னர் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். தன்னை கருணாநிதிக்கு மிகவும் பிடித்ததற்கான காரணம் குறித்து விளக்கினார் துரைமுருகன். 

அப்போது பேசிய துரைமுருகன், 55 ஆண்டுகளாக உறங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் கலைஞருடனேயே இருந்து அவருடன் வாய்ப்பை பெற்ற சிலரில் நானும் ஒருவன். இந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக கலைஞருடன் எனக்கு சண்டையோ ஊடலோ மனவருத்தமோ இருந்ததே இல்லை. 

மற்றவர்களை விட என்னை கலைஞருக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால், நான் எம்ஜிஆருடன் மிகவும் நெருக்கமானவன். எனினும் எம்ஜிஆர் தனியாக கட்சி தொடங்கி, என்னை அழைத்தபோது அவருடன் செல்லாமல் கலைஞரின் காலடியில் விழுந்தவன் நான். எம்ஜிஆருடன் மிகவும் நெருக்கமாக இருந்த நான், அவர் அழைத்தும் அவருடன் செல்லவில்லை. அதனால் என் மீது கலைஞருக்கு தனி பாசம் எனக்கூறி துரைமுருகன் நெகிழ்ந்தார்.