3வது முறையாக சிகிச்சைக்கு நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்த திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர் திமுக பொருளாளர் துரைமுருகன். கருணாநிதி இறந்தபோதுகூட சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது மகன் வேலூர் தொகுதி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.அங்கு பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு துரைமுருகன் அடிக்கடி அப்போலோ சென்று சிகிச்சை எடுத்து வருகிறார்.  

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காய்ச்சல், சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட துரைமுருகன், மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது. அடுத்தடுத்து இருமுறை அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில், நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரைமுருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.

இதையடுத்து, அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், துரைமுருகனை ஓரிரு நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்க மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று வீடு திரும்பினார். காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று இருந்தாலும் அவரது மகனை எம்.பி.,யாக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் அவரை வாட்டி எடுப்பதாகக் கூறப்படுகிறது.