அதிமுகவில் எல்லோரும் முதல்வர் ஆகலாம் என்றால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வதுக்கு முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுப்பாரா  என  திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு, அதன் தலைவர் துரைமுருகன் தலைமையில் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சேலத்தில் பணிகள் தாமதம், குறைபாடு என்று பொதுவாகச் சொல்ல முடியாது. எல்லா மாவட்டங்களிலும் உள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சரியாக நடைபெறவில்லை.” என்று தெரிவித்தார்.
பின்னர் பனமரத்துப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவில் எல்லோருமே முதல்வர்கள்தான். அதிமுகவில் எல்லோருமே முதல்வர் பதவிக்கு வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அப்படி என்றால் ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கத் தயாரா?
எப்போதுமே வாரிசு அரசியல் என்று பேசுகிறார்கள். கருணாநிதி வீட்டிலிருந்து மட்டும் வந்தால் வாரிசு அரசியலா? நேரு, தேவகவுடா, முலாயம் சிங் போன்றவர்களின் வீட்டில் இருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா?” என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.