திமுக தலைவராகவும், தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் இருந்த கலைஞர் ஆகஸ்ட் 7ந்தேதி இரவு மறைந்தார். திமுக 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கிறது. இந்நிலையில் அவரது நினைவு போற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மவுன ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.

இன்று ஆகஸ்ட் 12ந்தேதி மாலை 5 மணிக்கு வேலூர் மாநகரில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் வகையில் மவுன ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மவுன ஊர்வலம் கிரின் சர்க்கிள் பகுதியில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் கட்சியினர், பொதுமக்கள், வியாபார பெருமக்கள், இளைஞர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நடந்துவந்தனர்.  இந்த ஊர்வலத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், என் மீது அன்பு செலுத்தியவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவரை இழந்துவிட்டேன். அவர் இல்லாத நாட்கள் இனி என் வாழ்நாளில் இருண்ட நாட்களாக இருக்கும்’’ என கருதுகிறேன் எனச்சொல்லும்போது அவரது நா தழுதழுத்தது, கண்கள் கலங்கிய அவர் கட்டுப்படுத்த முடியாமல் சத்தம்போட்டு குலுங்கி குலுங்கி அழுதார். அப்போது மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த தொண்டர்களும் சத்தமிட்டு அழுதனர்.