தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுகவில் பொதுச்செயலாளர் அதிகாரங்கள் தலைவரிடமே இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவையடுத்து, புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்காக மார்ச் 29-ம் தேதி பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட வசதியாக பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக மு.க. ஸ்டாலினிடம் துரைமுருகன் ராஜினாமா கடிதம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்டதாக ஸ்டாலினும் அறிவித்தார். இதனால், துரைமுருகன் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 24 அன்று நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக திமுக பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டது. 
அலுவலக ரீதியாக துரைமுருகன் பொருளாளர் பதவியில் இருந்து விலகிய நிலையில், பொதுச் செயலாளராகவும் ஆக முடியாமல் இருந்தார். ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்து திமுக கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, தலைவருக்கு பொதுச்செயலாளர் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், “பொதுச்செயலாளர் - பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளதால், கழக சட்ட விதி18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பின் மூலம் பொதுச்செயலாளராகியிருக்க வேண்டிய துரைமுருகம், மீண்டும் பொருளாளர் பதவிக்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “தேர்தல் நெருங்கிவருவதால், கட்சிக்கு நிதி திரட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகளை பொருளாளர் இல்லாமல் மேற்கொள்வது கஷ்டம் என்பதால், இந்த முடிவை தலைவர் எடுத்துள்ளார். தற்போது பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் தலைவரிடம் உள்ளது. கொரோனாவின் தாக்கம் தொடரும்பட்சத்தில், தேவைப்பட்டால், தேர்தல் வரை இந்த நிலை நீடிக்கவும் செய்யலாம்” என்று பூடாகமாகச் சொல்கிறார்கள். இதன்மூலம்  தேர்தல் வரை பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் தலைவரிடமே இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.