ரவுடிகள் யார் ஆட்சியில் அதிகம்... யார் ஆட்சியில் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள் என்ற எதிர்கட்சி துணைத் தலைவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் விவாதம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெகுவாக ரசித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது; அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், இங்குதான் ரவுடிகள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணைத் தலைவர், ரவுடிகளைப் பற்றி குறிப்பிட்டார். ரவுடிகள் என்பவர்கள் ஒரே நாளில் உருவாவதில்லை. பல ஆண்டுகாலமாக, பல திருட்டுகள், கொலை வழக்குகளில் ஈடுபட்டவர்கள்தான் ரவுடிகள். உங்கள் ஆட்சியில் இருந்தவர்கள்தான், இப்போதும்
தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாங்கள் இப்போது கண்டுபிடித்திருக்கின்றோம். நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றார்.

இன்றைக்கு தமிழகத்தில் ரவுடிகள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கணக்கிடப்பட்டு, அவர்கள் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்லக்கூடிய ஒரு நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது. அமைதிப்பூங்காவாகவும் திகழ்கிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றங்கள் அதிகளவிலே கண்டுபிடித்திருக்கின்றோம். அதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதற்கு எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ரவுடிகள் எல்லா ஆட்சியிலும் உள்ளனர். ஆனால் கேக் வெட்டிக் கொண்டாடியது உங்கள் ஆட்சியில்தான் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசமாட்டார்; ஆனால் இப்போது நன்றாக பேசுகிறார் என்றார். 

அதற்கு முதலமைச்சர், கேக் வெட்டிக் கொண்டாடியவர்களைக் கைது செய்ததும் இந்த ஆட்சிதான் என்று முதலமைச்சர் எடப்பாடி கூறி இந்த விவாதத்தை முடித்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகனின் பேச்சை உறுப்பினர்கள் வெகுவாக ரசித்தனர்.