அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்து மனு அளித்துள்ளதாகவும், வாக்கு பதிவு நாளில் திமுக தோல்வி பயம் காரணமாக, பல மாநகராட்சிகளில் குண்டர்கள், ரவுடிகள், சமூக விரோதிகளை இறக்குமதி செய்து வார்டுக்குள் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சார்பு நிலையில் செயல்பட்டால் நீதிமன்றத்தில் பதில் கூற நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் மற்றும் பாபு முருகவேல் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில், மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தனர். தொடர்ந்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்து மனு அளித்துள்ளதாகவும், வாக்கு பதிவு நாளில் திமுக தோல்வி பயம் காரணமாக, பல மாநகராட்சிகளில் குண்டர்கள், ரவுடிகள், சமூக விரோதிகளை இறக்குமதி செய்து வார்டுக்குள் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், காவல்துறைக்கு தெரியும் என குறிப்பிட்ட அவர், அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் திமுக செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

100% நியாயமான தேர்தல் நடைப்பெறுவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், பெரும்பான்மையான வாக்குச்சாவடிகளை பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக மாற்ற திமுக திட்டமிட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணும் நாளிலும் வேட்பாளர்களை அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டார். எஸ்.பி.வேலுமணி ஜனநாயகத்திற்காக போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளது, திமுக அராஜக வழியில் செயல்பட்டு வருவதாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு துணை இராணுவ படை கட்டாயம் வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிசிடிவி கேமராக்களும் முழுமையான பாதுகாப்புடன் சீல் வைக்க வேண்டும் என கூறிய அவர், தேர்தல் ஆணையம் சார்பு நிலையில் செயல்பட்டால் நீதிமன்றத்தில் பதில் கூற நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர்கள் மக்களிடம் தேர்தலுக்காக பொய் கூறி வருகிறார்கள் என்றும், தேர்தல் விதிமீறல்களில் அமைச்சர்கள் ஈடுபடுவது, அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் செயல் எனவும், அமைச்சர் துரைமுருகன். ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். எஸ்.பி. வேலுமணி ஜனநாயகத்திற்காகதான் போராடினார் ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த ஜெயக்குமார், தொடர்ந்து திமுக அராஜக வழியில் ஈடுபட்டு வருகிறது என்றார்.
