durai murugan press meet about ops
கம்பீரமாக முதலமைச்சராக பணியாற்றிய ஓ.பன்னீர் செல்வம் இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றும்போது பின்னால் பவ்யமாக கைகட்டி, வாய்பொத்தி நிற்பது ஏன்? எல்லாம் இந்தப் பதவிக்குதானே என்று திமுக சட்டமன்ற துணைத் தலைவர் துரை முருகன் கலாய்த்துள்ளார்.
ஜெயா தொலைக்காட்சியில் பேட்டி அளித்த துரை முருகன், ஓபிஎஸ் என்ன நோக்கத்திற்காக சசிகலாவை எதிர்க்துக் கொண்டு அதிமுகவை விட்டு வெளியேறினாரோ அதை சுத்தமாக மறந்து போனார் என தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் பதவி தருகிறேன் என்று சொன்னவுடன் அதையெல்லாம் மறந்துவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றும்போது பின்னால் பவ்யமாக கைகட்டி, வாய்பொத்தி நிற்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சராக கம்பீரமாக பணியாற்றி எப்படி இருந்த இந்த ஓபிஎஸ் இப்ப இப்படி ஆயிட்டாரே என கிண்டல் பண்ணினார். இதில் ஏமாந்தவர் ஓபிஎஸ், ஏமாற்றியவர் இபிஎஸ் எனவும் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்க்கு கீரீடத்தை தலையில் வைத்துவிட்டு அவர் தலையை வெட்டிவிட்டார் என துரை முருகன் தெரிவித்தார்.
இதைப் போன்ற ஒரு மானங்கெட்ட பதவியும், அரசியலும் ஓபிஎஸ்க்கு தேவைதானா ? என கேள்வி எழுப்பிய துரை முருகன், மனிதன் என்றால் கொஞ்சமாவது மானம், ரோஷம் இருக்க வேண்டும் என்றும் அதை இழந்து ஒரு பதவி தேவைதானா என்றும் தெரிவித்தார்.
ஓபிஎஸ் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும், அவர் ஒரு பிழைப்புவாதி என்றும் துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
