தமிழக அரசியலில் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடிய அரசியல்வாதிகளில் முக்கியமானவர்கள் வைகோவும், துரைமுருகனும். பொசுக்கென்றால் அழுகை வந்துவிடும்.
நான் ஆண்! அதிலும் தேர்ந்த அரசியல்வாதி! எனும் நினைப்பை முன்னிருத்தி இருவரும் தங்களின் கண்ணீருக்கு ஒரு நாளும் கட்டுப்பாடு போட்டது கிடையாது.

முன்பெல்லாம் கருணாநிதியின் உயர்ந்த குணங்களை பற்றி பேசி கண்ணீர் விடும் துரை, இப்போது கருணாநிதியின் இயலாமையை சுட்டிக்காட்டி உருகுகிறார். வைகோ என்றுமே ஈழ விவகாரம் துவங்கி, தன் தாய் மாரியம்மாள் உள்ளிட்ட முக்கிய மனிதர்களை பற்றிப் பேசும்போது அழுதிடுவார்.

இந்த சூழலில் நேற்றும் துரைமுருகன் கண்ணீர் விட்டிருக்கிறார். அது வழக்கம்போல் கருணாநிதிக்குத்தானே! என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. காரணம், அவர் கண்ணீர் விட்டது எம்.ஜி.ஆர்-க்காக.

என்னது தி.மு.க.வின் துணைச்செயலாளர், அ.தி.மு.க.வின் நிறுவனருக்காக கண்ணீர் விட்டாரா? என்று அதிர வேண்டாம். காரணம், துரை முருகன் எம்.ஜி.ஆருக்கு வாழ்நாள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார். ஆம் துரையை படிக்க வைத்ததே எம்.ஜி.ஆர்.தான்.

இந்நிலையில் நேற்று வேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்வு ஒன்றில் பேசிய துரைமுருகன் “என்னை படிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர். என்னை வளர்த்தவரும் அவரே. சில காலம் எனக்கு கார்டியனாகவும் இருந்தார். அரசியலில் வேறு வேறு நிலையில் இருந்தாலும் கூட என்னுடைய நெஞ்சில் என்றும் வாழ்பவர் எம்.ஜி.ஆர்.” என்று உருகிச் சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார்.

பொதுவாக கருணாநிதிக்காக அழும் துரை, எம்.ஜி.ஆருக்காக அன்று அழுததில் பலருக்கு ஆச்சரியம். இந்நிலையில் அரக்கோணம் அ.தி.மு.க. எம்.பி.யான அரி “எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டதாக கூறும் துரைமுருகன். இருக்க வேண்டிய இடம் எதிரணியில் இல்லை, இங்கேதான், அ.தி.மு.க.வில்தான்.” என்று சொல்லி கலகலப்பூட்ட துரைக்கு லேசாய் சூடு போட்ட வலி.