நடிகர் ரஜினிகாந்த் நாளை தன்னுடைய 71-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருடைய ரசிகர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முதல் ஆளாக இன்றே பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்துக்குத் தெரிவித்துள்ளார். 
  இதுதொடர்பாகர் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், ‘ரஜினியோடு தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றி பரிசீலிப்போம்’ என்று தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்தக் கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களில் முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.