கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. ஆனால் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் அதிகாரிகள், மருத்துவர்கள் உடன் நடத்திய பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என உறுதி அளித்திருந்தனர்.

ஆனால் தேர்தலுக்குப் பிறகு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இரவு நேர ஊரடங்கு, மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ், தியேட்டர்கள், மால்கள், கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை ஆகியன விதிக்கப்படும் எனக்கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.