மகாராஷ்டிர மாநிலம் மும்பையை மிரள வைத்த பிரமாண்ட  பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மும்பை டப்பாவாலாக்களும் உணவு வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகளும் நிலமற்ற ஆதிவாசி மக்களும், நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விவசாயிகள் மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.

இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணமாக மும்பை புறப்பட்டனர். வழியில் திறந்தவெளியில் படுத்து உறங்கினர். சூரிய உதயத்துக்கு முன்னர் மீண்டும் மும்பை நோக்கி நடக்க தொடங்கினர். இந்தப் பேரணிக்கு அகில இந்திய கிஸான் சபா ஏற்பாடு செய்திருந்தது. இதில் பழங்குடியினத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றனர்.

நாசிக்கில் இருந்து கடந்த 5 நாட்களாக சுமார் 180 கி.மீ. நடை பயணம் செய்து அந்த  விவசாயிகள் மும்பை வந்தடைந்தனர். தெற்கு மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் விவசாயிகள் திரண்டனர். தொடர்ந்து 6 நாட்களாக இரவு, பகல், வெயில், மழை, குளிர் என எதையும் பார்க்காமல் தங்கள் கோரிக்கையே முக்கியம் என்று அவர்களுக்கு மும்பை டப்பாவாலாக்களும், இஸ்லாமிய சகோதரர்களும் இலவசமாக உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர்.

பட்டினியால் பரிதவித்த அந்த போராளிக்குக்கு உணவு வழங்கிய டப்பாவாலாக்களுக்கு விவசாய பெருமக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். மும்பைக்குள் அவர்கள் நுழைந்ததில் இருந்தே விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த டப்பாவாலாக்கள் அவர்களுக்கு தேவையான உணவை வழங்கி கௌரவித்தனர்.

இதுபோலவே மும்பை மக்களும், சமூக அமைப்புகள், நற்பணி மன்றங்கள் என பல தரப்பில் இருந்தும் விவசாயிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மக்கள் தானாகவே முன் வந்து விவசாயிகளுக்கு உணவும், தண்ணீரும் வழங்கினர்.

இவர்களின் இந்த மனிதாபிமானமும், விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டமும் இன்று அவர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது.