திருச்சியில் இருந்து காரில் அபினை கடத்திய பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகர் அடைக்கலராஜ் அதிரடியாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஊரடங்கு காலத்தில் போதை பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சியிலிருந்து மதுரைக்கு அபின் கடத்தப்படுவதாகக் குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, அந்த வழியாக வேகமாக வந்த காரை மறித்து சோதனையில் இடுபட்டனர். அப்போது, காரில் அபின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் அடைக்கலராஜ்,  கூட்டாளிகள் ஜெயபிரகாசம், சித்த மருத்துவர் மோன்பாபு, பாலசுப்பிரமணியன், சரவணன் ஆகியோரை போலீசார் கைது  செய்து விசாரணை நடத்தினர். கைப்பற்றப்பட்ட  போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் 15 லட்சம் ரூபாய் என்றும் இது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடைக்கலராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.