நான்  கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்ததாக எனக்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூரில் பேசியதாவது; தமிழ்நாட்டில் புதிய புதிய கட்சிகள் தொடங்கி வருகிறார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த், தினகரன் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் புதிய மாற்றத்தை உருவாக்குவதாக சொல்கிறார்கள். ஆனால் இவர்களால் மாற்றத்தை உருவாக்க முடியாது.

மேலும் பேசிய அவர், கமல்ஹாசன் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள். யார், யாருக்கு மின்னஞ்சல் முகவரி இருக்கிறதோ, அவர்களை உறுப்பினர்களாக சேர்த்ததாக மெயில் அனுப்புகிறார்கள்.

கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்ததாக எனக்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் (அப்போது தனது டேப்லேட்டில் மின்னஞ்சலுக்கு வந்திருந்த மெயிலை காட்டினார்).

அதில் டாக்டர் தமிழிசை வணக்கம் உறுப்பினராக சேர்ந்தமைக்கு உளமாற நன்றி. நீங்களும், நானும் நாமானோம், நாளை நமதே, இது உங்கள் உறுப்பினர் அடையாளமாகும் என்று குறிப்பிட்டு உறுப்பினர் எண்ணாக டி.எண்., டி.ஓ., எப். 92829 என்று குறிப்பிடப்பட்டு என்றும் மாறாத அன்புடன் கமல்ஹாசன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்படித்தான் புதிய உறுப்பினர்களை அவர்கள் சேர்த்து வருகிறார்கள்.