அமைச்சர் விஜய பாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்…பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….

தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜய பாஸ்கரை உடனடியாக அமைச்சா் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக . நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆா்.கே. நகா் தொகுதி இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட போது தோ்தல் பிரசாரத்தின் போது வாக்காளா்களுக்கு 4 ஆயிரம் வீதம் பணம் வழங்கியது தொடா்பாக அமைச்சா் விஜய பாஸ்கா் மீது குற்றம் சாட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்..

வருமான வரிதுறையினா் சோதனையில் தோ்தல் தொடா்பாக யார் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பது தொடா்பான ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினா் அறிவித்திருந்தனா் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னா் அமைச்சா் விஜய பாஸ்கரின்  100 ஏக்கா் நிலம், கல் குவாரி உள்ளிட்ட சொத்துகளை முடக்கினா். மேலும் வருமான வரித் துறை விசாரணை முடிவில் சொத்துகள் விடுவிக்கப்படும் என்று அறிவித்தனா்.

குட்கா உள்ளிட்ட போதை பொருள் விவகாரத்தில் தனியார்  நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவற்றை தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியதாகவும் அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சா் விஜய பாஸ்கரை விசாரணைக்காக வருகிற 17ம் தேதி நேரில்  ஆஜராக உத்தரவிட்டுள்ளனா். அவா் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும். இப்படிப்பட்ட ஒருவா் அமைச்சராக நீடிப்பது சரியான முறையல்ல என ராமதாஸ் தெரிவித்தார்.

எனவே விஜய பாஸ்கரை அமைச்சா் பதவியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.