1998-ம் ஆண்டு முதலே திராவிடக் கட்சிகளுக்கு மிகவும் தேவையான ஒரு கட்சியாக இருந்தது பாமக. தேர்தலுக்கு 4, 5 மாதங்களுக்கு முன்பே அந்தக் கட்சியை தங்கள் கூட்டணியில் வளைத்துப்போட்டுவிடும் அதிமுகவும் திமுகவும். இதன் காரணமாகவே பல சந்தர்ப்பங்களில் பாமக விரும்பும் அளவுக்கு தொகுதிகளும் கிடைத்துள்ளன.

1998-ல் அதிமுக, 1999-ல் திமுக, 2001-ல் அதிமுக, 2004-ல் திமுக, 2006-ல் திமுக, 2009-ல் அதிமுக, 2011-ல் திமுக என நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாறிமாறி திமுக, அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துவந்தது பாமக.  2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திராவிடக் கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணியே கிடையாது என்று பாமக அறிவித்தது. அதற்கேற்ப 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர்ந்தது பாமக. அந்தக் கூட்டணியில் வட மாவட்டங்களில் பாமகவுக்கு எதிராக மிகப் பெரிய வாக்கு வங்கியை வளர்த்த தேமுதிக இடம் பெற்றிருந்தபோதும் கூட்டணியில் சேர்ந்தது. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காத நிலையில், பாமக தருமபுரி தொகுதியில் வெற்றிபெற்று கெத்து காட்டியது. 

2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாமகவைக் கூட்டணியில் சேர்க்க அன்றைய திமுக தலைவர் கருணாநிதி கடும் முயற்சி செய்தார். ஆனால், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் தீர்க்கமாக இருந்தது பாமக. சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட பாமக 5.32 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பாமகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில், “ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது. 

கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு வழங்குகிறது” என்று அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2014, 2016 நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலின்போது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தீர்க்கமாக அறிவிக்க முடிந்த பாமகவால், இந்தமுறை அப்படி அறிவிக்க முடியவில்லை. திராவிடக் கட்சிகளுடன் மீண்டும் கூட்டணிக்குத் தயாராகிவிட்டது.  அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பாமக வெற்றிபெற்றது.  

அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரானார்கள். 2014-ல் பாஜக கூட்டணில் சேர்ந்து போட்டியிட்டு தருமபுரி தொகுதியில் பாமக வென்றபோதும், கூட்டணி தர்மம் கருதி அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 232 தொகுதியில் தனித்து போட்டியிட்டும் பாமகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. 1991, 1996, 2001, 2006, 2011 என தொடர்ந்து ஐந்து முறை பாமகவுக்கு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் கிடைத்த நிலையில், 2016-ல் ஒருவர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இரண்டு முறை தனித்துப் போட்டியிட்டு, பெரிய பலன் எதுவும் கிடைக்காத நிலையில், மீண்டும் கூட்டணி என்ற ஃபார்முலாவுக்கே பாமக திரும்பியிருக்கிறது.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோதே தனித்து போட்டி என்ற முடிவை எடுத்த பாமகவால், இந்த முறை அதற்கு எதிர்ப்பதமாக முடிவு எடுத்ததற்கு தோல்வியால் அந்தக் கட்சி துவண்டு போயிருப்பதுதான் காரணம். 2014 தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் துணையின்றி வெற்றி பெற முடிந்த அன்புமணியால், 2016-ல் அதே தொகுதிக்குட்பட்ட பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. இதுபோன்ற சங்கடங்களை மீண்டும் சந்திக்காமல் இருக்கவே கூட்டணிக்கு செல்லும் முடிவை பாமக எடுத்திருக்கிறது. 

தற்போது திமுக, அதிமுகவில் எந்தக் கூட்டணிக்கு செல்ல பாமக விரும்புகிறது என்பதுதான் முக்கிய கேள்வி. திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் உள்ளன. திமுகவில் மேற்கொண்டு கூட்டணி கட்சிகளைச் சேர்க்க ஸ்டாலின் விரும்புவாரா என்றும் தெரியவில்லை. 25 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. பாமக வந்தால், நிச்சயம் 5 தொகுதிகளாவது தர வேண்டியிருக்கும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக அதிகமாகவே வெற்றிபெற்றது. அதனால், பாமகவை சேர்க்க திமுக விரும்புமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான். அப்படியே திமுக கூட்டணிக்குள் பாமக வந்தாலும் விரும்பும் தொகுதிகள் கிடைப்பது கடினம். மேலும் திருமாவளவன் இருக்கும் கூட்டணியை பாமக விரும்புமா என்றும் தெரியவில்லை. இப்படி பல விஷயங்கள் இருப்பதால் திமுக கூட்டணிக்கு செல்வதில் பாமகவுக்கு பல முட்டுக்கட்டைகள் உள்ளன. 

திமுகவை விட்டால் அடுத்த வாய்ப்பு அதிமுக கூட்டணி அல்லது தினகரன் கூட்டணிதான். திமுக பெரிய கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிமுகவினரும் தினகரனும் பெரிய கூட்டணி அமைக்கும் எண்ணத்தில்தான் உள்ளனர். அங்கே சென்றால், தொகுதிகளும் நிறைவாகக் கிடைக்கும். விரும்பும் தொகுதிகளும் கிடைக்கும். இன்னொரு புறம் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, தாமக அல்லது அமமுக, தேமுதிக, பாமக, தமாக போன்ற கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைந்தால், திமுகவுக்கு எதிராக அதுவும் வலுவான கூட்டணியாகவே இருக்கும். ஒவ்வொரு முறையும் பாமக கூட்டணி மாறி வேறு கூட்டணியில் சேரும்போதெல்லாம், அதை ‘வெற்றிக் கூட்டணி’ என்று ராமதாஸ் அழைப்பது வழக்கம். இப்போதும் அப்படியொரு வெற்றிக் கூட்டணியில் சேரவே ராமதாஸ் நிச்சயம் விரும்புவார். அது எந்தக் கூட்டணி என்பது தை மாதத்தில் தெரிந்துவிடும்.