Asianet News TamilAsianet News Tamil

பிற்படுத்தப்பட்டோருக்கு பறிக்கப்பட்டது மருத்துவ கல்வி உரிமை..!! தலையில் அடித்துக் கதறும் கி.வீரமணி..!!

இதர பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 371 - விழுக்காடு அளவில் சொல்லவேண்டுமானால், வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே.

dravidar kazagam ke veeramani gave statement regarding medical education for backward class
Author
Chennai, First Published May 8, 2020, 2:12 PM IST

மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்பில் - அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடம் வெறும் 3.8 விழுக்காடே!  இந்த சமூக அநீதியை எதிர்த்து சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்து போராடுவது அவசியம் என திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி வழியுறுத்தியுள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  ‘நீட்’ என்னும் பேரால்  ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கான வாய்ப்பை வழிபறிபோல் பறித்துக் கொண்டிருக்கும் கொள்ளை ஒருபுறம் இருக்க, மருத்துவக் கல்லூரி, பட்ட மேற்படிப்புக்குரிய இடங்கள் கண்ணுக்கெதிரே கொள்ளை போகும் கொடூரத்தை என்னவென்று சொல்லுவோம்! திராவிட இயக்கத்தின் சாதனை! இந்தியத் துணைக் கண்டத்திலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்னும் சாதனை தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு. அரசு மருத்துவக் கல்லூரியின் எண்ணிக்கை 26.
இதனைத் திராவிட இயக்க ஆட்சியின் சாதனை என்று மார்தட்டியும் கூறலாம்! ஆனால், இதுதான் ஆதிக்கக் கூட்டத்தின் கண்களைக் கருவேலமுள்ளாகக் குத்துகிறது;

 dravidar kazagam ke veeramani gave statement regarding medical education for backward class

நேரடியாக - சமூகநீதி தேவைப்படுகிற மக்களின் வாய்ப்பைப் பறிக்க முடியாத  நிலையில், பல்வேறு கொல்லைப்புறங்களையும், சந்து பொந்துகளையும்   உண்டாக்கி, நாம் தமிழ்நாட்டில் அரும்பாடுபட்டு உருவாக்கிய இடங்களைக் கபளீகரம் செய்யும் கொடுமை இதோ: தமிழ்நாட்டில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 1758. இத்தனை இடங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன.இந்த இடங்களில் 50 விழுக்காடு மத்திய தொகுப்புக்குத் தாரை வார்க்க வேண்டும். அதாவது நம் வரிப் பணத்தில் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொத்த இடங்களில் 879 இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்குச் சென்றுவிடுகின்றன.இந்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாதாம். தமிழ்நாட்டிலோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30 விழுக்காடும்; மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 விழுக்காடு இடங்களும் சட்ட ரீதியாக உள்ளன. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் 879 இடங்களில் இவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது எத்தகைய மோசடி! 

dravidar kazagam ke veeramani gave statement regarding medical education for backward class

இதன் காரணமாக 440 பட்ட மேற்படிப்பு இடங்களை ஆண்டுதோறும் நாம் இழந்து வருகிறோம். 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு  வெறும் 3.8 விழுக்காடே! அகில இந்திய அளவில் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 13,237. இந்த இடங்கள்பற்றிய விவரங்கள் வருமாறு: அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 8833 இடங்கள் (ஒவ்வொரு கல்லூரியிலிருந்து 50 விழுக்காடு) மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து  717 இடங்கள். தனியார் கல்லூரிகளிலிருந்து 3688. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 9550 இடங்களில் 7125 இடங்கள். பொதுப்பிரிவிற்கு (74.6 விழுக்காடு) சென்றுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 371 - விழுக்காடு அளவில் சொல்லவேண்டுமானால், வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே. தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.,) கிடைத்த இடங்கள் 1385 (விழுக்காட்டில் 14.5), பழங்குடியினருக்கு (எஸ்.டி.,) 669 இடங்கள் (விழுக்காடு அளவில் 7) ஒதுக்கப்பட்டுள்ளன.

dravidar kazagam ke veeramani gave statement regarding medical education for backward class
 

தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் இந்த அளவுக்காவது இடங்கள் கிடைத்தன. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் வெறும் 3.8 விழுக்காடு என்னும் அளவுக்கு அடிமட்டத்துக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலை! உயர்ஜாதி ஏழைகளுக்கோ 653 இடங்கள்! அடுத்த கொடுமையைக் கேளுங்கள்!  பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS) என்பவர்களுக்கு - சட்ட விரோதமாக அவசர அவசரமாக ஒரு வாரத்திற்குள் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டதே - அந்த உயர்ஜாதி மக்களுக்கான இடங்கள் எத்தனைத் தெரியுமா? 653. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக 282 இடங்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த முன்னேறிய வகுப்பினர் என்றால் யார் தெரியுமா? மாதம் 66 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டக் கூடியவர்கள். வர்க்கத்தில்கூட வருணம்! உயர்ஜாதி என்றால், வர்க்கத்தில்கூட வருணம் எப்படி கொடிகட்டி வண்ண வண்ணமாகப் பறக்கிறது பார்த்தீர்களா? 

dravidar kazagam ke veeramani gave statement regarding medical education for backward class

மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே இல்லை - கிடையவே கிடையாது என்று அடம்பிடிக்கப்படுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சமூகநீதிக்கு எதிரானது என்பது மட்டுமல்ல - மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு எதிரான ஜனநாயகப் படுகொலை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். சமூகநீதி சக்திகள் ஒன்று சேரட்டும்! நாடாளுமன்றத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு சமூகநீதி சக்திகள் ஒருங்கிணைந்து இந்த அநீதிக்கு - அப்பட்டமான சட்ட மீறலுக்கு ஒரு முடிவைக் காண்பது அவசியம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். விரைவில் தமிழ்நாட்டில் இதற்கான தொடக்கத்தை முன்னெடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். சமூகநீதி என்றாலே, அது தந்தை பெரியார் பிறந்த மண் தானே முன் கையை நீட்டவேண்டும். என கி .வீரமணி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios