மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும் ஜெயலலிதாவின் டாக்டருமான சிவக்குமர் இன்று ஆஜராகியுள்ளார்.

டாக்டர் சிவக்குமார் ஏற்கெனவே ஜனவரி 8 ஆம தேதி முதன்முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா முதன்முறை முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே அவரது உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்தவர் சிவக்குமார்.

டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் என்ற முறையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளில் அவர் வீட்டில் இருந்ததுடன், அப்போலோ மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிக் கேட்டறிந்தவர் சிவக்குமார் என்பதால் அது குறித்த சான்றுகளை அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டிருந்தார். 

இந்த நிலையில் மருத்துவர் சிவக்குமார் இன்று இரண்டாம் முறையாக நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஆஜராகித் தன்னிடமிருந்த சான்றுகளை வழங்கியதுடன், தனக்குத் தெரிந்த தகவல்களையும் தெரிவித்தார்.