சென்னை அப்பல்லோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அளித்த சிகிச்சை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், அவர் யாரோ ஒரு நபருடன் ரகஸியமாக உரையாடும் இரண்டு நிமிட வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

2017 பிப்ரவரியில் எடுக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படும் அந்த வீடியோவை யார் எதற்காக இந்த சமயத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

எதிரில் பேசும் நபர் ஃப்ரேமுக்குள் வராத அந்த உரையாடலில் , “ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் 2016 நவம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு என்னை அழைக்கவில்லை. அப்போலோவில் இயன்ற அளவுக்கு ஜெயலலிதாவுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று ரிச்சர்ட் பீலே கூறுகிறார்.

அவருடன் உரையாடும் நபர், “கலைஞர் முதல்வராக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்வதற்கு அவர் உடன்படவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர். அதுபோல ஜெயலலிதாவை லண்டன் அழைத்துச் செல்வது தொடர்பாக சசிகலா என்ன கூறினார்?” என்று கேட்கிறார்.

அதற்கு, “வெளிநாடு செல்ல வேண்டியது அவசியமா என்று சசிகலாதான் முதலில்  என்னிடம் கேட்டார். கண்டிப்பாகப் போக வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தால் அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன். முதலில் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது அவரை சமாளிப்பது என்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. பின்னர் சூழலைப் புரிந்துகொண்டு நன்றாக ஒத்துழைக்க ஆரம்பித்தார்’ என்கிறார்.

இறுதியாக பத்திரிகையாளர் சந்திப்பை நல்லபடியாகக் கையாண்டீர்கள் என்று எதிரிலிருக்கும் நபர் டாக்டர் பீலேவைப் பாராட்ட ‘ அந்த பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் கடினமாகவே இருந்தது. நாங்கள் கூடுமானவரை அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறோம்’ என்று பதிலளிக்கிறார் பீலே.

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லாமல் தவிர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு, டாக்டர் வாயாலேயே  பதில் சொல்லும் வீடியோவாக இருப்பதால் இதை தினகரன் தரப்பு லீக் செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.