Asianet News TamilAsianet News Tamil

ஆஹா... ஓஹோ... இரண்டாவது முறையாக வலிக்காமல் தடவிக் கொடுத்து ஊசி போட்ட டாக்டர் ராமதாஸ்!!

தேர்தலை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட், வரவேற்கத் தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளதாகவும், மாநில அரசின் ஆளுநர் உரையை அதிகமாக விமர்சிக்காத நிலையில் தற்போது பிஜேபியையும் விமர்சிக்காமல் புகழ்ந்து தள்ளியுள்ளார் டாக்டர் ராமதாஸ்  அறிக்கையில் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

dr.ramadoss welcomed BJP Govt Budget
Author
Chennai, First Published Feb 1, 2019, 7:50 PM IST

பட்ஜெட் தாக்கல் குறித்து கருத்து  டாக்டர் ராமதாஸ்,    மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்டவாறே பல சலுகைகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எனினும், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாதது பெரும் குறையாகவே உள்ளது.

இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயமாக விவசாயிகள் இருப்பதால், அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வந்தது. பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையிலும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதற்கேற்ப 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து முன்தேதியிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

எனினும் ஏக்கர் கணக்கில் நிதியுதவி வழங்காமல், விவசாயி கணக்கில் நிதியுதவி வழங்குவது எதிர்பார்த்த பலனை வழங்காது.எனவே குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் வகையில் இந்த திட்டத்தை அரசு மாற்றியமைக்க வேண்டும்.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, அவர்கள் வாங்கிய வங்கிக் கடன் மீது 2% வட்டி மானியம் வழங்கப்படும். கடனை தவணை தவறாமல் செலுத்துவோருக்கு மேலும் 3% வட்டி மானியம் வழங்கப்ப டும் என்பதும் முழு பலனை தராது.

வருமானவரி செலுத்தாமல் இருப்பதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேபோல், நிரந்தரக்கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. இதன்மூலம், நேர்மையாக வரி செலுத்துவோரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் வருமானவரி விதிதங்களில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. குறைந்தபட்ச வருமான வரி விகிதம் 20% என்பதை ஏற்க முடியாது. ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டில் இருந்து 10% ஆக குறைக்க அரசு முன்வர வேண்டும்.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் போதுமானவையல்ல. ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள தொடர்வண்டி திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிக்கும் வகையில் தெற்கு ரயில்வே துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க போதிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மொத்தத்தில் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எப்போதுமே புள்ளிவிவரத்தோடும், பட்ஜெட்டில் உள்ள குறைகளை மட்டுமே அடித்து துவம்சம் பண்ணும் டாக்டர் ராமதாஸ் தற்போது இந்த பட்ஜெட்டை விமர்சிக்காமல் கருத்து கூறியிருப்பது அடுத்து வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்தே இப்படி அறிக்கை விட்டுள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios