சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காலை காய்கறி வாங்குவதற்காக பெருமளவில் மக்கள் குவிந்திருக்கின்றனர். அவர்களிடையே சமூக இடைவெளி என்ற உணர்வு சிறிதும் இல்லை. நாட்டில் வேறு எங்குமே காய்கறி இல்லை என்பது போல, கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க மக்கள் முண்டியடித்தது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைதான். இவர்கள் காய்கறிகளை வாங்குவதுடன், கொரோனாவையும் சேர்த்து வாங்குகின்றனர் என்பது தான் உண்மை. 

சந்தையில்தான் காய்கறிகளை வாங்குவோம் என்று மொத்தமாக பொதுமக்கள் குவிந்தால், அவர்களை கொரோனா வைரசிடமிருந்து எவராலும் காப்பாற்ற முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்து, இன்றுடன் இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில், அதை மதிக்காமல் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ஊரடங்கை மீறுவோர் மீது தொற்றுநோய் சட்டப்படி தொடரப்படும் வழக்குகள் சம்பந்தப்பட்டோரின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆணை, மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் காவலர்கள் முதல் மாநில முதலமைச்சர், பாரதப் பிரதமர் வரை அனைவரும் ஊரடங்கை மதித்து நடக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். நானும் இது தொடர்பாக தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறேன். ஆனால், ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுவோர் எண்ணிக்கையும், பொது இடங்களில் குவிவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காலை காய்கறி வாங்குவதற்காக பெருமளவில் மக்கள் குவிந்திருக்கின்றனர். அவர்களிடையே சமூக இடைவெளி என்ற உணர்வு சிறிதும் இல்லை. நாட்டில் வேறு எங்குமே காய்கறி இல்லை என்பது போல, கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க மக்கள் முண்டியடித்தது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைதான். இவர்கள் காய்கறிகளை வாங்குவதுடன், கொரோனாவையும் சேர்த்து வாங்குகின்றனர் என்பது தான் உண்மை.
சென்னையில் கொயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க சென்னை மாநகராட்சியும், பெருநகர வளர்ச்சிக் குழுமமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தனியார் வணிக நிறுவனங்களும் காய்கறிகளை வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்குகின்றன. தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் இதே போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு விற்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் சந்தை விலையைவிட குறைவாக உள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் சந்தையில்தான் காய்கறிகளை வாங்குவோம் என்று மொத்தமாக பொதுமக்கள் குவிந்தால், அவர்களை கொரோனா வைரசிடமிருந்து எவராலும் காப்பாற்ற முடியாது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் சுற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. முக்கிய சாலைகளில் காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருந்தால், உட்புற சாலைகளில் அதிக அளவில் வலம் வருகின்றனர். இது ஊர் சுற்றும் காலமல்ல... கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பதற்காக ஊரடங்கும் காலம் என பல முறை எச்சரித்தாலும் அவர்களுக்கு விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் வரவில்லை. ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.60 லட்சத்துக்கும் கூடுதலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்பிறகும் வீட்டுக்குள் அடங்காமல் ஊர் சுற்றுவோர் அவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பெரும் தீங்கை விளைவிக்கின்றனர்.