புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது; மாநில அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன்பாக, அது குறித்து பல்கலை.களை மானியக்குழு கட்டாயப்படுத்தக் கூடாது; கட்டாயப்படுத்த முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் புதிய கல்விக் கொள்கையை உடனடியாக செயல்படுத்தாவிட்டால் அவற்றுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று பல்கலைக் கழக மானியக்குழு எச்சரித்திருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், அதை செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், இல்லாவிட்டால் மானியத்தை நிறுத்தப்போவதாக அச்சுறுத்துவதும் மாநில சுயாட்சிக்கு சவால் விடுக்கும் செயல்களாகும்.


புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும்படி தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு நெருக்கடி அளித்து வருவது குறித்து கடந்த 3-ஆம் தேதி விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனாலும், பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் மானியக் குழுவின் நெருக்கடி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த சில வாரங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுப்பியிருக்கிறது.
அண்மையில் அனுப்பிய கடிதத்தில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை உடனடியாக செயல்படுத்தும்படி மானியக்குழு ஆணையிட்டுள்ளது. குறிப்பாக அனைத்து கல்வி நிறுவனங்களும், அவற்றின் பேராசிரியர்களும் தங்களின் விவரங்களை பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் வித்வான் இணைய தளத்திலும், இந்திய ஆராய்ச்சி வலைத்தள இணைப்பு அமைப்பிலும் பதிவு செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாத உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது. இந்த அப்பட்டமான மிரட்டல் கண்டிக்கத்தக்கது.