இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடும், இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். அகில இந்திய தொகுப்புக்கான இட இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது.

 
ஆனால், இட ஒதுக்கீட்டின் அளவு, அதை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் ஆகியவற்றை இறுதி செய்வதற்காகத்தான் மத்திய, மாநில அரசுகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கியக் குழுவை அமைத்து, விவாதித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 22ம் தேதி நடத்தப்பட்ட நிலையில், அடுத்தக்கூட்டத்தை எப்போது வேண்டுமானாலும் இறுதி முடிவை எடுத்து இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், அதை செய்ய முன்வராத மத்திய அரசு, இட ஒதுக்கீடு குறித்து பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியுள்ளது. இது பெரும் துரோகம்.


மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் கொள்கை அளவில் அனுமதி அளித்து விட்ட நிலையில், அதை செயல்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை இன்னும் நிறைவடையாத நிலையில், நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்த தடையும் இல்லை. பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் தமிழ்நாட்டில் அகில இந்திய தொகுப்பு இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


மத்திய அரசு முன்வந்தால் அகில இந்திய தொகுப்பில் நடப்பாண்டிலேயே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உச்சநீதிமன்றமும் அனுமதிக்கும். எனவே, மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில், தமிழ்நாட்டில் மட்டும், நடப்பாண்டிலேயே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.